search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜகவுடன் கூட்டணி என்ற யூகங்களை அடித்து நொறுக்கிய ஸ்டாலின் - காங். நிம்மதி
    X

    பாஜகவுடன் கூட்டணி என்ற யூகங்களை அடித்து நொறுக்கிய ஸ்டாலின் - காங். நிம்மதி

    கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித் ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கும் என பேசப்பட்ட நிலையில், தலைவர் பொறுப்பேற்ற அன்றே அதற்கான பதிலை ஸ்டாலின் கூறிவிட்டார். #DMK #MKStalin
    சென்னை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்கிற பேச்சு இப்போதே பரபரப்பாகிவிட்டது.

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் கூட்டணி தொடர்பான யூகங்கள் பலமாகவே தென்பட்டன. பா.ஜனதா கட்சியுடன் தி.மு.க. நெருக்கம் காட்டி வருவதாகவும், இதன் காரணமாகவே பிரதமர் மோடி கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்னை வந்ததாகவும் பேசப்பட்டது. நாளை (30-ந்தேதி) நடைபெறும் கருணாநிதி நினைவஞ்சலி கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதும் இந்த யூகத்திற்கு மேலும் வலு சேர்த்தது.

    இதுபோன்ற அரசியல் யூகங்களை எல்லாம் அடித்து நொறுக்கி ஒரே நாளில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தி.மு.க. வின் புதிய தலைவரான மு.க.ஸ்டாலின். தி.மு.க.வில் தளபதியாக, செயல் தலைவராக பதவி வகித்த மு.க.ஸ்டாலின், கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க. தலைவராக நேற்று பொதுக் குழுவில் அறிவிக்கப்பட்டார். தலைவரான பின்னர் பொதுக்குழுவில் முதல் பேச்சிலேயே தனது எண்ண ஓட்டங்களை ஸ்டாலின் உணர்ச்சிப் பூர்வமாக வெளிப்படுத்தினார்.

    பா.ஜனதாவுடன் தி.மு.க. கூட்டணி சேரப் போவதாக வெளியான தகவலை தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களான வைகோ, திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களை வெளியிட்டனர். தி.மு.க. எந்த சூழ்நிலையிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதற்கான சூழல் இல்லை என்று தெரிவித்தனர்.

    கருணாநிதியின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சியினர் கலந்து கொள்வதை வைத்து கூட்டணிக்கு அச்சாரம் என கூறி முடிச்சு போடக்கூடாது என்றும் அவர்கள் கூறினார்கள்.

    இந்த நிலையில் மு.க.ஸ்டாலினும் கூட்டணி தலைவர்களின் எண்ணத்தை பிரதி பலிக்கும் வகையில் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் காவி மயமாக்க நினைக்கும் மோடி அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்று ஆவேசமாக பேசினார். இதன் மூலம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன்தான் தி.மு.க. கூட்டணி அமைக்கும் என்பதையும் ஸ்டாலின் உறுதி செய்துள்ளார். இதனால் தோழமை கட்சி தலைவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில கட்சிகளும் தி.மு.க. அணியில் உள்ளன. இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து பா.ஜனதாவுக்கு எதிராக தி.மு.க. அணியை பலம் வாய்ந்த அணியாக மாற்ற மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு இருப்பதும் உறுதியாகி உள்ளது.
    Next Story
    ×