search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலும் சில மதகுகளில் விரிசல்- முக்கொம்பு கொள்ளிடம் அணை முற்றிலும் இடிந்து விழும் அபாயம்
    X

    மேலும் சில மதகுகளில் விரிசல்- முக்கொம்பு கொள்ளிடம் அணை முற்றிலும் இடிந்து விழும் அபாயம்

    முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் மேலும் சில மதகுகளில் விரிசல் மற்றும் அணையின் அடித்தளம் பிளாட்பாரத்தில் விரிசல் இருப்பதாக நீரில் மூழ்கி ஆய்வு செய்த நீச்சல் வீரர்கள் தெரிவித்துள்ளனர். #kollidam #kollidambridge #mukkombudam
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கடந்த 22-ந்தேதி இரவு 9 மதகுகள் உடைந்தன. அதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மதகுகளை அடைக்க 2½ லட்சம் மணல் நிரப்பிய சாக்கு மூட்டைகள் தயார் செய்யப்பட்டன. அணையின் முதலாவது மதகு முதல் 17-வது மதகு வரை, 220 மீட்டர் தூரத்துக்கு மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது இதுவரை 1.25 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளது. இப்பணியில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தநிலையில் அணையில் இடிந்த 9 மதகுகள் மட்டுமின்றி மீதமுள்ள 36 மதகுகளும் நல்ல நிலையில் உள்ளதா? என்றும், கொள்ளிடம் அணையின் உறுதி தன்மை குறித்தும் ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

    இதற்காக, தண்ணீருக்கு அடியில் சென்று அணையின் மதகுகளில் விரிசல் உள்ளதா? அணையின் பிளாட்பாரம் விரிசல் விடாமல் இருக்கிறதா? என கண்டறிவதற்காக ஆழ்கடலில் மூழ்கி நீச்சல் பயிற்சி அனுபவம் உள்ள ‘ஹைடெக்’ சிவில் என்ஜினீயர்ஸ் ஏஜென்சியினர் தூத்துக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

    அவர்களில், ஆழ்கடலில் மூழ்கி முத்து மற்றும் சிப்பிகளை சேகரிக்கும் அனுபவம் உள்ள நீச்சல் பயிற்சியாளர்கள் பாலு (வயது56), சிவா (40), சந்தனகுமார் (40) ஆகிய 3 பேரும் முக்கொம்பு கொள்ளிடம் அணைக்கு வந்தனர்.

    அவர்கள் தண்ணீரில் மூழ்கி அணையின் ஒவ்வொரு மதகையும் ஆய்வு செய்தனர். தூண்கள், மதகுகள் மற்றும் அணையின் உறுதித்தன்மை குறித்து உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தண்ணீரில் மூழ்கி ஆய்வு நடத்தினர். அப்போது, கொள்ளிடம் அணையில் உள்ள எஞ்சிய மதகுகள் சிலவற்றில் விரிசல் ஏற்பட்டு இருப்பதும், அணையின் அடித்தள பிளாட்பாரத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது.


    இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனை சீரமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் சில மதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் எஞ்சிய அணைப் பகுதியும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.

    இதனிடையே காவிரி ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரிப்பு, திருச்சியில் பெய்த மழை ஆகியவற்றால் கொள்ளிடம் அணையில் தற்காலிக சீரமைப்பு பணி பாதிக்கப்பட்டது. இதையறிந்த பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி வந்தார்.

    கொள்ளிடம் அணைப்பகுதிக்கு சென்று சீரமைப்பு பணியை பார்வையிட்ட அவர், அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்படாமல் விரைவாக முடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதையும் அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார். தற்காலிக சீரமைப்பு பணியை விரைந்து முடிப்பது தொடர்பாகவும், மேலும் சில மதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அதனை சீரமைப்பது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

    தற்காலிக பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் ராசாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சேதமடைந்த பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்ததாக பாறாங்கற்கள் அடுக்கும் பணி நடைபெற இருக்கிறது. பொதுப்பணித்துறை மூலம் 260 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் சுவர் அமைக்கப்படும். தற்போது முதல் கட்டமாக 60 சதவீத சீரமைப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. கொள்ளிடத்துக்கு வரும் தண்ணீரை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னும் 4 நாட்களில் நிறைவுபெறும். அதன் பின்னர் 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தாலும் கொள்ளிடம் அணைக்கு பாதிப்பு ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்தால் வெள்ள பாதிப்பை தடுப்பதற்காக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    கடந்த மாதம் அதிக அளவு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் காரணமாக அணையின் மதகுகள் உடைந்தன. தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் மேலும் சில மதகுகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்கள், விவசாயிகளிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கர்நாடகாவில் மழை குறைந்ததன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது குறைக்கப்பட்டுள்ளது.

    அங்கு கூடுதலாக மழை பெய்து தண்ணீர் திறந்துவிடப்பட்டால் திருச்சி கொள்ளிடம் மேலணையில் மேலும் சில மதகுகள் உடைந்து, அணையின் எஞ்சிய பகுதியும் உடைய விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அப்படியொரு நிலை ஏற்பட்டால் அதனை தடுப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து அங்கு புதிய அணை கட்டுவதற்கான பணியை விரைவில் தொடங்க உள்ளனர். அதற்கான ஆய்வில் நிபுணர்கள் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நில அளவீடு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. #kollidam #kollidambridge #mukkombudam
    Next Story
    ×