search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புத்தகம் வாசிப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் - திரளான மாணவர்கள் பங்கேற்பு
    X

    புத்தகம் வாசிப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் - திரளான மாணவர்கள் பங்கேற்பு

    இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம் தொடங்கப்பட்ட மேலவாசல் கிராமத்தில் புத்தகம் வாசிப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    சுந்தரக்கோட்டை:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலவாசல் கிராமத்தில் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி நடமாடும் நூலகம் தொடங்கப்பட்டது. இது இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் நடமாடும் நூலகமாகும். இந்த நூலகம் மாட்டு வண்டியில் செயல்பட்டது. இதன் நினைவை போற்றும் வகையிலும், புத்தக வாசிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மன்னார்குடியில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

    மன்னார்குடி கிளை நூலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் மேலவாசல் கிராமம் வரை மாட்டுவண்டியில் நடமாடும் நூலகம் சென்ற பாதை வழியாக சுமார் 3 கி.மீ. தூரம் நடைபெற்றது. இதில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்துக்கு திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜப்பா தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுனர் திருநாவுக்கரசு, ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக நூலகர் அன்பரசு வரவேற்றார். ஜேசீஸ் அமைப்பின் மன்னை தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் கலந்து கொண்டு பேசினார்.

    ஊர்வலத்துக்கு மேலவாசல் கிராம எல்லையில் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். ஊர்வலத்தை தொடர்ந்து மேலவாசல் கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூலகர் லெட்சுமணன் வரவேற்றார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக நாட்டார் வழக்காற்றியல் துறை தலைவரும், பேராசிரியருமான காமராசு கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    புத்தகம் வாசிப்பது வாழ்க்கையை வளப்படுத்தும். மேலவாசல் கிராமத்தை தேர்ந்தெடுத்து நடமாடும் நூலகத்தை தந்த கனகசபை பிள்ளை என்பவரை நினைவு கூரும் விதமாக இந்த ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. மேலவாசல் கிராமத்தில் நடமாடும் நூலகம் தொடங்கப்பட்ட நாள் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி ஆகும். ஆகவே வருகிற அக்டோபர் 21-ந் தேதிக்குள் ஒவ்வொரு வீட்டிலும் புத்தகத்தை வாசித்து, அதை வாசிப்பு திருவிழாவாக கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×