search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அருகே மொபட் மீது அரசு பஸ் மோதி முதியவர் பலி
    X

    புதுக்கோட்டை அருகே மொபட் மீது அரசு பஸ் மோதி முதியவர் பலி

    புதுக்கோட்டை அருகே மொபட் மீது அரசு பஸ் மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே மொபட் மீது அரசு பஸ் மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அரசு பஸ்சை கண்டித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை அருகே உள்ள வடக்குப்பட்டியை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 60). நேற்று இவர் தனது பேரன் அரவிந்துடன்(11) வீட்டிற்கு தேவையான பூக்களை வாங்குவதற்காக மொபட்டில் புதுக்கோட்டைக்கு வந்தார். பின்னர் பூக்களை வாங்கி கொண்டு அதே மொபட்டில் வீட்டிற்கு புதுக்கோட்டை-மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தார். மொபட் புதுக்கோட்டை அருகே உள்ள மறவப்பட்டி பகுதியில் சென்றபோது, ராமேஸ்வரத்தில் இருந்து புதுக்கோட்டை வழியாக கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர் பாராத விதமாக மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயமடைந்த சின்னதம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அரவிந்த் படுகாயமடைந்தார். இந்த விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் அரவிந்தை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு, நிற்காமல் சென்ற அரசு பஸ்சை கண்டித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் புதுக்கோட்டை-மதுரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த திருக்கோகர்ணம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் அரசு பஸ் டிரைவர் விபத்து நடைபெற்ற இடத்தில் பஸ்சை நிறுத்த அச்சப்பட்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பஸ்சை நிறுத்தியதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் புதுக்கோட்டை-மதுரை சாலையில் உள்ள மறவப்பட்டியில் நேற்று சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் இறந்த சின்னதம்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×