search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை 14 சதவீதம் குறைவு - வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை 14 சதவீதம் குறைவு - வானிலை ஆய்வு மையம் தகவல்

    தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட 14 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. #Rain #MeteorologicalCentre
    சென்னை:

    பொதுவாக ஜூன் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை தென்மேற்கு பருவ மழை காலம் ஆகும். இதே போன்று அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை வடகிழக்கு பருவ மழை காலம் ஆகும். ஆனால், அப்போதைய சூழ்நிலையில் ஏற்படும் வானிலை மாற்றத்தின்படி ஒருசில நாட்களுக்கு முன், பின் இந்த பருவ மழை காலங்கள் தொடங்கும்.

    அதன்படி தென்மேற்கு பருவ மழையானது கடந்த மே மாதம் 26-ந் தேதி அந்தமானிலும், 29-ந் தேதி கேரளாவிலும் தொடங்கியது. தென்மேற்கு பருவ மழை தொடங்கிய போதே, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் தமிழகம் தவிர ஏனைய இந்திய மாநிலங்கள் முழுவதும் தென்மேற்கு பருவமழையால் மழை பெறும் என்றும், தமிழகத்துக்கு மிகக்குறைவான அளவே மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டு இருந்தது.

    அதே போன்று, அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழையால் கடுமையான வெள்ள சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அந்த மழை வெள்ளத்தால் தமிழகத்தில் உள்ள மேட்டூர் உள்பட பெரும்பாலான அணைகளும் நிரம்பி வழிந்தன. எனினும், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அதிக அளவில் மழை பொழியவில்லை.



    இந்த நிலையில், கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் நேற்று வரையிலான நிலவரப்படி தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையானது வழக்கத்தை விட 14 சதவீதம் குறைந்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

    தமிழகத்தில் பொதுவாக வடகிழக்கு பருவ மழையை விட, தென்மேற்கு பருவ மழை காலத்தில் குறைந்த அளவே மழை பெய்யும். அதிலும், தென்மேற்கு பருவ மழையை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி உள்ள நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்யும். இவை தவிர்த்த அனைத்து மாவட்டங்களும் தென்மேற்கு பருவ மழை காலத்தில் மழை மறைவு பிரதேசமாகவே உள்ளன. பிற மாவட்டங்களை பொறுத்தவரையில் தென்மேற்கு பருவ மழை காலத்தின் போது வெப்பச்சலனம் காரணமாகவே மழை கிடைக்கிறது.

    தமிழகத்தை பொறுத்தவரையில் தென்மேற்கு பருவ மழையினால் 321.4 மில்லி மீட்டர் மழையும், வடகிழக்கு பருவ மழையினால் 442 மில்லி மீட்டர் மழையும் சராசரியாக கிடைக்கும். இது இயல்பான அளவு ஆகும். அதன்படி தற்போது பெய்துவரும் தென்மேற்கு பருவ மழையினால் கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் இன்று (நேற்று) வரை 190.4 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால், இன்று (நேற்று) வரை பெய்துள்ள மழை அளவின் படி 163.2 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. இது சராசரி அளவை விட 14 சதவீதம் குறைவு ஆகும்.

    எனினும் எங்கள் கணக்கீடு படி, 19 சதவீதம் வரையிலான மழை அளவின் கூடுதல் அல்லது குறைவு என்பதை நாங்கள் இயல்பான மழை அளவாகவே கருதுகிறோம். எனவே தற்போது வரை இயல்பான மழை பெய்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டை பொறுத்தவரையில் இதே காலகட்டத்தில் வழக்கத்தை விட 26 சதவீதம் கூடுதலாக மழை பெய்து 240.6 மில்லி மீட்டர் மழை அளவை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். #Rain #MeteorologicalCentre
    Next Story
    ×