search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகநூல் மூலம் காதலித்து, பட்டதாரி பெண்ணிடம் 25 பவுன் நகை மோசடி
    X

    முகநூல் மூலம் காதலித்து, பட்டதாரி பெண்ணிடம் 25 பவுன் நகை மோசடி

    முகநூல் மூலம் காதலித்து பட்டதாரி பெண்ணிடம் ரூ.2½ லட்சம் மற்றும் 25 பவுன் நகைகளை மோசடி செய்த நடனக்கலைஞரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த எம்.எஸ்.சி. பட்டதாரி இளம்பெண் ஒருவர், சென்னை போரூர் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி உள்ளார். அங்கிருந்தவாறே அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் வடபழனி சாலிகிராமம், வெங்கடேஸ்வரா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வர் (வயது 25) என்ற வாலிபருக்கும் இடையே கடந்த 2017-ம் ஆண்டு முகநூல் வழியாக நட்பு ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. 10-ம் வகுப்பு வரை படித்துள்ள விக்னேஸ்வர் நடனக்கலைஞர் ஆவார். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

    இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இளம்பெண்ணிடம் அவர் நெருங்கிப்பழகினார். மேலும் திருமணம் செய்வதாகவும் கூறி அந்த இளம்பெண்ணிடம் இருந்து ரூ.2½ லட்சம் மற்றும் 25 பவுன் நகையையும் பெற்று உள்ளார். இதைத்தொடர்ந்து, தன்னை திருமணம் செய்யுமாறு அந்த இளம்பெண் விக்னேஸ்வரிடம் கூறினார். ஆனால் பல்வேறு சாக்குப்போக்குகளை சொல்லி விக்னேஸ்வர் காலம் கடத்தி வந்தார். ஒரு கட்டத்தில் விக்னேஸ்வர் தன்னை ஏமாற்றுவதை புரிந்து கொண்ட அந்த இளம்பெண், அவரிடம் முறையிட்டார்.

    அப்போது, ‘உன்னை நான் திருமணம் செய்வும் மாட்டேன், வாங்கிய பணம் மற்றும் நகையையும் திருப்பி தரமுடியாது’ என விக்னேஸ்வர் கூறினார். மேலும் பணம் மற்றும் நகையை கேட்டாலோ, வெளியில் கூறினாலோ, இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை முகநூலில் வெளியிடுவேன் எனவும் மிரட்டல் விடுத்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், இது குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விக்னேஸ்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேறு யாரையும் இதைப்போல் அவர் ஏமாற்றி பணம் பறித்துள்ளரா? எனவும் விசாரித்து வரும் போலீசார், விக்னேஸ்வரின் முகநூல் கணக்குகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    பட்டதாரி பெண்ணை முகநூல் மூலம் காதலித்து 25 பவுன் நகை மற்றும் ரூ.2½ லட்சத்தை மோசடி செய்த நடனக்கலைஞர் கைது செய்யப்பட்ட விவகாரம் அம்பத்தூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  #Facebook #JewelTheft 
    Next Story
    ×