search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் காய்கறிகள் விலை கடும் உயர்வு
    X

    நாகர்கோவிலில் காய்கறிகள் விலை கடும் உயர்வு

    நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற கத்தரிக்காயின் விலை ரூ.150 ஆக விற்கப்படுகிறது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் அப்டா மார்க்கெட், வடசேரி கனகமூலம் சந்தை செயல் பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுகளுக்கு குமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    மேலும் ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையம், பெங்களூரு போன்ற இடங்களில் இருந்தும் பலவகையான காய்கறிகள் நாகர்கோவிலுக்கு கொண்டுவரப்படு கிறது. இங்கிருந்து கேரளாவுக்கு அதிக அளவு காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகிறது. வருகிற 25-ந்தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஓணம் பண்டிகையின்போது கேரளாவில் காய்கறிகளின் தேவை அதிமாக இருக்கும். இந்த ஆண்டு இதுவரை இல்லாத மழை காரணமாக கேரளா பெரும் சேதத்தை சந்தித்து உள்ளது.

    மேலும் ஓணம் பண்டிகை கொண்டாட்டமும் களை இழந்து காணப்படுகிறது. இதனால் கேரளாவுக்கு அனுப்பப்படும் காய்கறிகள் வழக்கத்தை விட சற்று கூடுதலாக மட்டும்தான் செல்கிறது. இதற்கிடையில் நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற கத்தரிக்காயின் விலை ரூ.150 ஆக இன்று இருந்தது. கிலோ ரூ.5-க்கு விற்பனையான புடலங்காய் சமீப காலமாக ரூ.25 வரை விற்பனை ஆனது. இன்று அது பல மடங்கு உயர்ந்து கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. ரூ.10-ரூ.15-க்கு விற்ற வெள்ளரிக்காய் கிலோ ரூ.70 ஆக இருந்தது. மற்ற காய்கறி களின் விலையும் உயர்ந்து உள்ளது. கேரட் ரூ.90, பீன்ஸ் ரூ.60, மிளகாய் ரூ.70, சேனை ரூ.30, தக்காளி ரூ.24, தடியங் காய் ரூ.36-க்கு விற்பனை ஆனது.

    இதுபற்றி வியாபாரி ஒருவர் கூறும்போது, சுப மூகூர்த்த தினங்கள் வருவதால் காய்கறிகளின் தேவை அதிகமாக உள்ளது. அதே சமயம் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் இந்த விலை உயர்வு காணப்படுகிறது என்றார். வாழை இலையும் விலை உயர்ந்துள்ளது. ஒரு ரூபாய், 2 ரூபாய்க்கு விற்ற ஒரு வாழை இலை ரூ.10 ஆக உள்ளது. 150 இலை கொண்ட ஒரு கட்டு ரூ.1,500-க்கு விற்பனை ஆனது. தற்போது பலத்த காற்று வீசுவதால் வாழை இலைகள்கிழிந்துவிடுவதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. 

    இதேபோல வாழைதார்கள் விலையும் உயர்ந்து உள்ளது. செவ்வாழை, ரசக் கதளி வாழைத்தார்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. ரூ.400-க்கு விற்ற ஒரு தார் ரசக்கதளி இன்று ரூ.700 ஆக உயர்ந்து காணப்பட்டது.

    ஓணம் பண்டிகையையொட்டி தோவளை பூ மார்க்கெட்டில் இருந்து கேரள வியாபாரிகள் அதிகளவு பூக்களை வாங்கிச் செல்வார்கள். இந்த ஆண்டு மழை காரணமாக அங்கு ஓணம் பண்டிகையின் உற்சாகம் குறைந்தே காணப்படுகிறது. இதனால் தோவாளை மார்க்கெட்டுக்கு கேரள வியாபாரிகள் வருகை சமீபமாக குறைந்தே காணப்படுகிறது. பூக்கள் விற்பனையும் மதமாக உள்ளது.

    தற்போது கேரளவில் ஓரளவு சகஜ நிலை திரும்பி வருகிறது. எனவே ஓணம் விற்பனையை எதிர்பார்த்து தோவாளை வியாபாரிகள் அதிகளவு பூக்களை வாங்கி வைத்துள்ளனர். இன்று இரவு முதல் நாளை காலை வரை விடிய, விடிய பூக்கள் விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இன்று தோவாளை மார்க்கெட்டில் மல்லிப்பூ கிலோ ரூ.350, பிச்சி ரூ.300-க்கு விற்பனையானது. சம்பங்கி உள்பட வண்ண மலர்கள் கிலோ ரூ.200 வரை காணப்பட்டது. கடந்த ஆண்டு ஓணத்தின்போது 10 நாட்களில் 80 டன் வரை பூக்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×