search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி மாவட்டத்தில் 22,862 பெண்களுக்கு அம்மா பரிசு பெட்டகம்
    X

    தூத்துக்குடி மாவட்டத்தில் 22,862 பெண்களுக்கு அம்மா பரிசு பெட்டகம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் 22,862 பெண்களுக்கு 16 வகையான தரமான பொருட்கள் உள்ளடங்கிய அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அவரது வழியில் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜெயலலிதா தொடங்கிவைத்த அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம் எல்லோராலும் பாராட்டு பெற்றுள்ளது.

    இந்த திட்டத்தில், குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்கு தேவையான பராமரிப்புத் துண்டு, குழந்தைக்கான உடை, படுக்கை, கொசு வலை, நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பு, சோப்புடன் கூடிய சோப்புப் பெட்டி, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கை கழுவும் திரவம்,

    பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தாய்ப்பாலை அதிகரிக்கவும் சவுபாக்கியா சுண்டிலேகியம், தாய் மற்றும் பச்சிளம் குழந்தையை பராமரிக்க தேவையான பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு பெட்டகம் உட்பட 16 வகையான பொருட்கள் உள்ளன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் சுகாதாரத்துறையின் மூலம், தூத்துக்குடி வட்டத்தில் உள்ள 28 அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையங்களில் 2108 பெண்களுக்கும், 7 நகர் புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 91 பெண்களுக்கும், 5 அரசு மருத்துவமனையில் 7214 பெண்களுக்கும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 6739 பெண்களுக்கும்,

    கோவில்பட்டி வட்டத்தில் உள்ள 22 அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையங்களில் 1598 பெண்களுக்கும், 2 நகர் புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8 பெண்களுக்கும், 4 அரசு மருத்துவமனையில் 5104 பெண்களுக்கும், என மொத்தம் 22,862 பெண்களுக்கு 16 வகையான தரமான பொருட்கள் உள்ளடங்கிய அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் பயன்பெற்ற அத்திமரப்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்த நாகதுரை மனைவி முத்துக்கனி கூறுகையில், "அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தின் மூலம் எங்கள் சுமை எங்களுக்கு குறைந்துள்ளது. இதில் உள்ள அனைத்து பொருட்களும் தரமானதாக உள்ளது" என்றார்.

    மேலதட்டப்பாறை யாதவர்தெருவை சேர்ந்த கந்தவடிவேல் மனைவி மாரியம்மாள் கூறுகையில், "இப்பொருட்களை நாங்கள் வெளியே வாங்க வேண்டுமென்றால் அதிகமாக செலவாகும். மகப்பேறு சிகிச்சையும் இலவசமாக அளித்து குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையையும் கவனிப்பதற்கு இலவசமாக பொருட்கள் வழங்கிய அம்மா அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்” என்றார்.
    Next Story
    ×