search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சம்பள உயர்வை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஊர்வலம்
    X

    சம்பள உயர்வை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஊர்வலம்

    சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர் ஊர்வலமாக சென்றனர்.
    கோவை:

    தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மேற்கு மண்டலம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு கோவை மாவட்ட தலைவர் கே.சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். மாநில கவுரவ பொதுச்செயலாளர் குப்புசாமி, முன்னாள் மாநில தலைவர் செல்லமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் கோவை மகளிர் பாலிடெக்னிக்கல்லூரி முன்பிருந்து புறப்பட்டு பாலசுந்தரம் சாலை வழியாக வ.உ.சி. பூங்காவை அடைந்தது. அப்போது ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இது குறித்து சங்க மாவட்ட தலைவர் கே.சண்முகசுந்தரம் கூறியதாவது:-

    கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், கரூர், தேனி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலம் சார்பில் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் 2,200 ரேஷன் கடைகள், 600 தொடக்க கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அவை செயல்படவில்லை. ரேஷன் கடை ஊழியர்களுக்கு நியாயமான புதிய ஊதியம் வழங்க வேண்டும்.

    விற்பனையாளர்களுக்குரிய ஊதியத்தை மாதந்தோறும் அரசே நேரடியாக வழங்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக போராடி வரும் விற்பனையாளர்கள், சங்க பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    காலி பணியிடங்களைநிரப்ப வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் முடிந்ததும் கோரிக்கைகள் குறித்து அனைவருக்கும் விளக்கி கூறப்பட்டது. பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனு கலெக்டர் ஹரிகரனிடம் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×