search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி விலை கிடு கிடு உயர்வு
    X

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி விலை கிடு கிடு உயர்வு

    பக்ரீத் மற்றும் முகூர்த்தநாள் எதிரொலியாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை நீண்ட நாட்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு கேரளாவிற்கும், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

    கேரளாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக குறைந்த அளவு காய்கறிகளே அனுப்பி வைக்கப்பட்டன. தினசரி 80 லாரிகளில் கேரளாவிற்கு காய்கறிகள் செல்லும். ஆனால் கடந்த ஒரு வாரமாக 25 லாரிகளில் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மழை காரணமாக காய்கறிகளின் ஆர்டர்களும் குறைந்தது. இதனால் மார்க்கெட்டிற்கு கொண்டு வந்த காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. விவசாயிகள் கிடைத்த விலைக்கு காய்கறிகளை விற்று சென்றனர்.

    தற்போது கேரளாவில் மழை முற்றிலும் நின்றுவிட்டதால் நேற்று முதல் வழக்கம்போல் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் நாளை பக்ரீத் பண்டிகை வருவதாலும் அடுத்து 2 நாட்கள் முகூர்த்த நாளாக இருப்பதால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது.

    எனவே கடந்த ஒரு வாரமாக தேங்கி கிடந்த காய்கறிகளுக்கும் கூடுதல் விலை கிடைத்துள்ளது.

    கிலோ ரூ.17-க்கு விற்ற வெண்டை ரூ.40-க்கும், சின்ன வெங்காயம் ரூ.45, பல்லாரி ரூ.30, தேங்காய் ரூ.45, இஞ்சி ரூ.120, பூண்டு ரூ.120, கத்தரிக்காய் ஒரு பை ரூ.450, தக்காளி ஒரு பெட்டி ரூ.150, புதினா ரூ.50, மல்லி ரூ.30, எலுமிச்சை ரூ.30, பீட்ரூட் ரூ.15, பீன்ஸ் ரூ.40, முருங்கைக்காய் ரூ.18, பச்சை மிளகாய் ரூ.50 என கொள்முதல் செய்யப்பட்டது.

    பெரும்பாலான காய்கறிகளின் விலை 2 மடங்கு அதிகரித்தது. இதனால் விவசாயிகளிடமும் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு நிலமை சீரடைந்துள்ளதால் கேரளாவிற்கும் அதிக அளவு காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    Next Story
    ×