search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பக்ரீத் பண்டிகையையொட்டி பொய்கை சந்தையில் ரூ.1 லட்சம் வரை மாடுகள் விற்பனை
    X

    பக்ரீத் பண்டிகையையொட்டி பொய்கை சந்தையில் ரூ.1 லட்சம் வரை மாடுகள் விற்பனை

    பக்ரீத் பண்டிகையையொட்டி வேலூர் அருகே உள்ள பொய்கை சந்தையில் ரூ.1 லட்சம் வரை மாடுகள் விற்பனையானது.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பொய்கை வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. வாரம் பிறந்து செவ்வாய்க்கிழமை என்றாலே பொய்கை சந்தை களை கட்டும். கால்நடைகள், கோழி மட்டுமின்றி காய்கறி, விதைகள் போன்றவையும் விற்கப்படுகிறது.

    ஆனாலும், பொய்கை சந்தையை மாட்டு சந்தை என்றே அழைப்பர். இங்கு வேலூர், திருவண்ணாமலை உள்பட ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காளை, பல்வேறு இன கறவை மாடுகள் விற்பனைக்கு வருகின்றன.

    வாரம் ஒருநாள் சந்தையில் மட்டும் ரூ.1 கோடி முதல் ரூ.1½ கோடி வரை வியாபாரம் நடைபெறுகிறது. மாடுகள் விற்பனை மட்டுமே ரூ.1 கோடியை எட்டும். சந்தைக்கு முந்தைய நாள் இரவிலேயே வெளியூர்களில் இருந்து மாடுகள் கொண்டு வந்து இறக்கப்பட்டுவிடும்.

    மாடுகளின் பல்லை பிடித்தும், கன்று ஈன்றதை வைத்தும், நாளொன்றுக்கு எவ்வளவு லிட்டர் பால் கறக்கும் என்பதை கேட்டும் இடைத்தரகர்கள் மூலம் விலை நிர்ணயித்து மாடுகள் உடனடியாக விற்கப்படும்.

    பக்ரீத் பண்டிகை நாளை நடைபெறுவதை யொட்டி இறைச்சிக்காக மாடுகள் வாங்குபவர்கள் அதிகளவில் சந்தைக்கு வந்திருந்தனர். கடந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையின் போது கேரள மாநில வியாபாரிகள் அதிகளவில் பொய்கை சந்தைக்கு வந்திருந்தனர்.

    கடந்த ஆண்டு கேரளாவுக்கு மட்டும் 7 ஆயிரம் மாடுகள் வாங்கி சென்றனர். இந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்பு காரணமாக கேரளாவில் பக்ரீத் பண்டிகை களையிழந்துள்ளது.

    இதனால் பொய்கை மாட்டு சந்தைக்கு கேரள வியாபாரிகள் வரவில்லை. இதனால் வழக்கத்தை விட மாடுகள் விற்பனை குறைவாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.ஆனாலும் உள்ளூர் வியாபாரிகள் வருகை அதிகமாக இருந்தது. மாடுகள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனையானது.

    வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூரில் திங்கட்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு சுற்று வட்டார பகுதியான தண்டராம்பட்டு, செங்கம், மணலூர்பேட்டை, வெறையூர், திருவண்ணாமலை, மூங்கில்துறைப்பட்டு, சங்கராபுரம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதியில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வளர்க்கும் ஆடு மற்றும் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    இந்த நிலையில் நேற்று வாழவச்சனூரில் நடந்த வாரச்சந்தைக்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளையும், மாடுகளையும் விற்பனைக்காக கொண்டு வந்தனர். நாளை (புதன்கிழமை) பக்ரீத் பண்டிகை என்பதால் ஆடுகள் விற்பனை களைகட்டியது. ஆடுகளை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    இதனால் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது. மேலும் முஸ்லிம்கள் குர்பானி வழங்குவதற்காகவும் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கி சென்றனர்.

    நேற்று மட்டும் ரூ.1 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×