search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலத்த மழை பெய்தும் நிரம்பாத களக்காடு பச்சையாறு அணை
    X

    பலத்த மழை பெய்தும் நிரம்பாத களக்காடு பச்சையாறு அணை

    நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்த நிலையிலும் களக்காடு பச்சையாறு அணை நிரம்பாதது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளைக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பச்சையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 50 அடி ஆகும். களக்காடு-நாங்குநேரி பகுதியில் உள்ள 115 குளங்கள் அணையின் மூலம் பாசன வசதி பெற்று வருகின்றன. இதன் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

    களக்காடு தலையணைக்கு கீழ் பகுதியில் தேங்காய் உருளி அருவி அருகில் இருந்து செல்லும் ஊட்டுகால்வாய் மூலம் பச்சையாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். பச்சையாறு அணைக்கு முக்கிய நீர்வரத்து இந்த கால்வாய் தான். இதுதவிர கீரைக்காரன் தொண்டு மலையடிவாரத்தில் பெய்யும் மழைநீரும் அணைக்கு வருகிறது. கட்டப்பட்டதில் இருந்து 3 தடவை மட்டுமே அணை முழு கொள்ளளவான 50 அடியை எட்டியுள்ளது.

    பச்சையாறு அணை கடந்த 2001-ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அப்போது அணை முழு கொள்ளளவான 50 அடியை எட்டியது. அதன்பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு மழையின் போதும், 2013-ம் ஆண்டும் அணை நிரம்பி வழிந்தது. பின்னர் அணை நிரம்பவில்லை.

    ஒவ்வொரு ஆண்டும் அணை நிரம்புவதற்கு முன்பே திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் 49 அடியாக உயர்ந்த போதும், முழு கொள்ளவை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் கூட கடந்த 1 வாரமாக நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்த மழையினால் அருகில் உள்ள திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணை, நம்பியாறு அணை உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகள் நிரம்பி வழிகின்றன. களக்காடு தலையணையில் கரைபுரளும் காட்டாற்று வெள்ளத்தால் கடந்த 15-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காட்டில் ஓடும் நாங்குநேரியான் கால், பச்சையாறு, உப்பாறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதுபோல குளங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களிலும் வெள்ளம் கரைபுரண்டது.

    இதையடுத்து களக்காடு பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி, ததும்புகின்றன. ஆனால் களக்காடு பச்சையாறு அணை இன்னுமும் நிரம்பவில்லை. அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 23 அடியாகவே உள்ளது. இதற்கு காரணம் பச்சையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை என்றாலும், சமீபத்தில் பெய்த மழையினால் கால்வாய்களில் வந்த தண்ணீர் வீணாக கடலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் முருகன் கூறியதாவது:-

    களக்காடு-நாகர்கோவில் சாலையில் நாங்குநேரியான் கால்வாயில் புதிய பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருவதால், நாங்குநேரியான் கால்வாயில் செல்ல வேண்டிய தண்ணீர் உப்பாற்றில் திருப்பி விடப்பட்டது. இந்த தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் கலந்து வீணாக கடலுக்கு சென்றுவிட்டது. உப்பாற்றில் திருப்பி விடப்பட்ட தண்ணீரை பச்சையாறு அணைக்கு திருப்பி விட்டிருந்தால் அணை நிரம்பியிருக்கும்.

    விவசாயத்திற்கு தேவையான நேரத்தில் அணையில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் கிடைத்திருக்கும். எனவே இனிமேலாவது உப்பாற்றில் விடப்படும் தண்ணீரை பச்சையாறு அணைக்கு திருப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    அணை நிரம்ப இன்னும் 27 அடிக்கு தண்ணீர் தேங்க வேண்டும். தற்போது அணைக்கு நீர்வரத்தும் இல்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    Next Story
    ×