search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளுடன் ரவுடி கைது
    X

    சீர்காழி அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளுடன் ரவுடி கைது

    சீர்காழி அருகே வாகன சோதனையின்போது டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளுடன் ரவுடியை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம், கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் முனிசேகர், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் நேற்று இரவு சீர்காழியை அடுத்த எருக்கூரில் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது சிதம்பரத்தில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் சீர்காழியை நோக்கி வந்தனர். சந்தேகத்தில் பேரில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது 3 பேரும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். இதில் ஒருவர் மட்டும் சிக்கினார்.

    அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில் அவர்கள் வெடிகுண்டுகளை வாகனத்தில் வைத்திருந்தது தெரியவந்தது. 2 டிபன் பாக்ஸ்களில் அந்த வெடிகுண்டுகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து எருக்கூரில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் காலியாக உள்ள இடத்தில் அந்த டிபன் பாக்ஸ்களை வைத்துள்ளனர். அதனை சுற்றி மணல் மூட்டைகளையும் அடுக்கி வைத்துள்ளனர். டிபன் பாக்ஸ்சில் இருப்பது நாட்டு வெடிகுண்டா? சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளா? என்பது தெரியவில்லை.

    இதுதொடர்பாக ஆய்வு செய்ய திருச்சியில் இருந்து வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துள்ளனர். மேலும் பிடிப்பட்ட வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த கலைவாணன் (வயது30) என்பதும், தப்பி ஓடியவர்களில் ஒருவர் எருக்கூரைச் சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    இவர்கள் 3 பேரும் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் கூலிப்படையாக செயல்பட்டு வருகிறார்களா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர். இவர்கள் 3 பேரும் கொலை திட்டத்துடன் வந்தார்களா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் எருக்கூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×