search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வால்பாறையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள்- அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்
    X

    வால்பாறையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள்- அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்

    கோவை மாவட்டம் வால்பாறையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிவாரண பொருட்களை வழங்கினார்.
    கோவை:

    கோவை மாவட்டம், வால்பாறையில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள வாழைத்தோட்டம் பகுதியிலுள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    பொள்ளச்சி -வால்பாறை சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. தற்போது அதனை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    வால்பாறையில் பாரதியார் பல்கலைகழக கலை அறிவியல் கல்லூரி தற்காலிக முகாமில் தங்க வைகப்பட்டுள்ள 95 பேர்களை பார்வையிட்டு நிவாரணப்பொருட்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது-

    தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே, கனமழை பெய்து வருகிறது. கடந்த 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை பெய்த கனமழையில் வால்பாறை நகரம் வாழைத்தோட்டம் ஒட்டியுள்ள ஆற்றுப்பகுதியில் வெள்ளம் புகுந்ததன் காரணமாக சுமார் 50 வீடுகளும்,டோபி காலனி ஒட்டியுள்ள ஆற்றுப்பகுதயில் 30வீடுகளும், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா மற்றும் காமராஜர் நகர் அருகிலுள்ள ஆற்றுப்பகுதியில் 70 வீடுகளும், எம்.ஜி.ஆர் நகர் முதல் ஸ்டேன்மோர் ஒட்டியுள்ள ஆற்றுப் பகுதியில் 25வீடுகளும் பாதிப்படைந்தது.

    அதில் குடியிருந்தவர்களில் சிலர் அவர்களின் உறவினர்களின் வீடுகளுக்கு சென்றனர். 30ஆண்கள், 45 பெண்கள், 20 சிறுவர்கள் என 95 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டு, வால்பாறை நகர பகுதியில் தற்காலிக முகாம்களாக அமைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைகழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி ஆகிய நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவருக்கும், உணவு, உடை, போர்வைகள், குடிநீர், மற்றும் மருத்துவவசதி போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளது.

    கனமழையின் போது, வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் 38-வது கொண்டை ஊசி வளைவில் ராட்சத மரங்கள் விழுந்தும், 27-வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவும் ஏற்பட்டது. அவை உடனடியாக சரிசெய்யப்பட்டது.

    9-வது கொண்டை ஊசி வளைவில் சாலையில் அடிப்பகுதியில் மண்அரிப்பு ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பஸ்கள் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சாலைசீர் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தற்போது இருசக்கர வாகனங்களும், கார்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வால்பாறை - சாலக்குடி சாலையில் மண்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாலை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    தமிழக அரசு இயற்கை இடர்பாடுகளை திறம்பட கையாண்டு பொதுமக்களை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் போர்கால அடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஹரிஹரன், சி.மகேந்திரன் எம்.பி., கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ,, மாவட்ட வருவாய் அலுவலர்துரை.ரவிச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு.பாண்டியராஜன், பொள்ளாச்சி சப்-கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன், உதவி கலெக்டர் (பயிற்சி) சினேகா , நெடுஞ்சாலை துறை கோட்டப்பொறியாளர் ஆண்டனி சேவியர் ஆகியோர் கலந்து கொண்டனர். #tamilnews
    Next Story
    ×