search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடகனாற்றில் மணல் கடத்திய 2 லாரிகள் பிடிபட்டது
    X

    குடகனாற்றில் மணல் கடத்திய 2 லாரிகள் பிடிபட்டது

    குடகனாற்றில் மணல் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஓடும் மிக முக்கிய ஆறு குடகனாறு. ஆத்தூர் அணை நிரம்பி மறுகால் வரும் தண்ணீர் குடகானாற்றில் வரும். இதனோடு சிறுமலை மற்றும் ஆங்காங்கே உள்ள குன்று மலை பகுதிகளில் இருந்து பெய்யும் மழை நீரும் இந்த குடகானாற்றில் கலக்கிறது. மேலும், ஆங்காங்கே உள்ள துணை ஓடைகள் வழியாக வரும் மழை நீரையும் அழைத்துக் கொண்டு செல்கிறது குடகனாறு.

    ஆத்தூர் தொடங்கி ரெட்டியார்சத்திரம், அகரம் வழியாக வேடசந்தூர் சென்றடைகிறது. இந்த ஆற்று பகுதியில் கடந்த 2 ஆண்டுகாளாக போதிய மழை பெய்யாததால் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனை பயன்படுத்தி மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் குடகனாறு பல இடங்களில் அதன் தன்மையை இழந்து 50 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஆற்று ஓரங்களில் இருந்த நிலத்தடி நீரும் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.

    தொடர்ச்சியாக மணல் திருடு நடைபெற்றாலும் அவ்வப்போது, கண் துடைப்பிற்காக ஒரு சில லாரிகள், மாட்டு வண்டிகளை பிடிப்பதும் அபராதம் விதிப்பதும் தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் வருவாய் துறையும், போலீசாரும் குடகனாற்றில் நடைபெறும் மணல் திருட்டை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டையும் வைக்கின்றனர்.

    இதனிடையே குடகனாற்றில் திருடப்பட்ட மணல் லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சின்னாளபட்டி பகுதியில் விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது. இதனை பொது மக்கள் சிலர் சின்னாளபட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீசார் இரவு 3 மணிக்கு மணல் திருடி வந்த டிப்பர் லாரி ஒன்றும், டிராக்டர் ஒன்றையும் பிடித்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில் டிராக்டரை ஓட்டி வந்த சிக்கனம்பட்டியை சேர்ந்த சுப்பையா, டிப்பர் லாரியை ஓட்டி வந்த அழகம்பட்டியை சேர்ந்த சின்னசாமி ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த சின்னாளபட்டி போலீசார் 2 டிரைவர்களையும் கைது செய்தனர். மேலும், மணல் லாரிகள் இரண்டையும் ஆத்தூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×