search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் ஓடும் லாரியில் மாரடைப்பு ஏற்பட்டு டிரைவர் பலி
    X

    நாகர்கோவிலில் ஓடும் லாரியில் மாரடைப்பு ஏற்பட்டு டிரைவர் பலி

    நாகர்கோவிலில் ஓடும் லாரியில் மாரடைப்பு ஏற்பட்டு டிரைவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    விழுப்புரம் அருகே பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், (வயது 57), லாரி டிரைவர்.

    விஸ்வநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் பகுதியில் உள்ள மதுபான ஆலையில் இருந்து மதுபாட்டில்கள் ஏற்றிக் கொண்டு லாரியில் கேரளா புறப்பட்டார்.

    கேரளாவில் நேற்று மதுபாட்டில்களை இறக்கி விட்டு ஊருக்கு திரும்பினார். அவரது லாரி நாகர்கோவில் நோக்கி வந்தது.

    லாரி, நேற்று நள்ளிரவு நாகர்கோவிலை அடுத்த கனியாகுளம் பகுதியில் வந்த போது விஸ்வநாதனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவர், மூச்சு விட திணறினார்.

    இதனால் லாரி, அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. விஸ்வநாதன், டிரைவர் இருக்கையிலேயே மூச்சு, பேச்சின்றி மயங்கி கிடந்தார்.

    லாரியில் இருந்த கிளீனர் இதுபற்றி அந்த வழியாக வந்தவர்களிடம் கூறினார். அவர்கள், வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் விரைந்து வந்து விஸ்வநாதனை மீட்டனர். அவரை உடனடியாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு விஸ்வநாதனை பரிசோதித்த டாக்டர்கள் அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஓடும் லாரியில் டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு லாரி பள்ளத்தில் கவிழ்ந்தபோது அந்த வழியாக வேறு வாகனங்கள் எதுவும் வரவில்லை. மேலும் நள்ளிரவு நேரம் என்பதால் போக்குவரத்தும் இல்லை.

    இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் விழுப்புரத்தில் உள்ள விஸ்வநாதனின் உறவினர்களுக்கும் அவர் இறந்து போன தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்த பிறகு விஸ்வநாதனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×