search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்: போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது
    X

    சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்: போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது

    விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறியதாவது:-

    விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருந்தால் உடனே அவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வேண்டும்.

    அதுபோல் வழிப்பறி, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் மணல் கொள்ளை நடக்காமல் இருக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சாலை விபத்துகளை தடுக்க முக்கிய சாலைகளில் தடுப்புக்கம்பிகள் அமைத்து சீரான வேகத்தில் வாகனங்கள் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள், சாராயம் கடத்தலை தடுக்க அனைத்து சோதனைச்சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும்.

    தொடர்ந்து, மதுபாட்டில்கள் கடத்தல், சாராய விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதுபோல் தொடர்ந்து ரவுடியிச செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வெள்ளைச்சாமி, சங்கர், வீமராஜ், திருமால், ரவிச்சந்திரன், இளங்கோவன், முத்துமாணிக்கம், ராஜேந்திரன், மகேஷ், கோமதி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் மாவட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தி வரும் அரசு வாகனங்களின் பராமரிப்பு குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பொதுமக்களின் வசதிக்காக அவசர உதவிக்கு நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு வாகனங்களில் அதன் செல்போன் எண்ணை ஒட்டும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். 
    Next Story
    ×