search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயனாவரத்தில் விடுதலை சிறுத்தை பிரமுகர் படுகொலை
    X

    அயனாவரத்தில் விடுதலை சிறுத்தை பிரமுகர் படுகொலை

    அயனாவரத்தில் விடுதலை சிறுத்தை பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனியைச் சேர்ந்தவர் ஜோசப் (41). விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    ரவுடியான இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். அந்த கட்சியில் மாநில தொண்டர் அணி துணை செயலாளராக பொறுப்பில் இருந்தார்.

    நேற்று இரவு 9 மணி அளவில் ஜோசப், நியூ ஆவடி ரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். 6 பேர் கொண்ட கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்தது.

    பின்னர் அருகில் உள்ள கால்வாயில் உடலை தள்ளிய கொலையாளிகள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    கொலை செய்யப்பட்ட போது, ஜோசப், ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. கையில் பலத்த காயத்துடன் அவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அயனாவரம் போலீசார் விரைந்து சென்று ஜோசப்பின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வெட்டுக் காயம் அடைந்து சிகிச்சை பெறுபவரின் பெயர் சதீஷ் என்பதும் அவர் போலீஸ்காரர் என்பதும் இன்று காலையில் தெரிய வந்தது.

    போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ரவுடிகள் ஒழிப்பு பிரிவில் பணியாற்றி வரும் சதீஷ், ஜோசப்பிடம் விசாரணை நடத்துவதற்காக சென்றுள்ளார்.

    நியூ ஆவடி ரோட்டில் வைத்து ஜோசப்பிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோதே கொலையாளிகள் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளனர்.

    கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியானது.

    கொலையுண்ட ஜோசப்புக்கு, கொரட்டூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. அந்த பெண்ணுடன், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த லோகேசும் தொடர்பில் இருப்பதாக ஜோசப் சந்தேகப்பட்டார். இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்த விரோதம் கடந்த டிசம்பர் மாதம் அடிதடியில் முடிந்தது.

    அப்போது ஜோசப், லோகேசை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த லோகேஷ் மயிரிழையில் உயிர் தப்பினார்.

    இது தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜோசப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜோசப் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் வெளியில் வந்தார்.

    தன்னை வெட்டியதற்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் ஜோசப்பை லோகேஷ் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. ஜோசப், சிறையில் இருந்து விடுதலையான நாளில் இருந்தே லோகேசும், அவரது கூட்டாளிகளும், அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர். ஜோசப்பின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில்தான் நியூஆவடி ரோட்டில் ஜோசப் போலீஸ்காரர் சதீசுடன் பேசிக் கொண்டிருந்தார்.

    மத்திய குற்றப்பிரிவின் கீழ் இயங்கி வரும் ரவுடிகள் ஒழிப்பு பிரிவில் பணியாற்றி வருவதால், போலீஸ்காரர் சதீஷ், சீருடை அணிந்திருக்க வில்லை. அவர் சாதாரண உடையில் இருந்தார். இதனால் அவர் போலீஸ்காரர் என்பது கொலையாளிகளுக்கு தெரியவில்லை.

    எந்தவித பயமுமின்றி ஜோசப்பை வெட்டிக் கொன்றனர். அரிவாளால் ஜோசப்பை வெட்டியவர்களை சதீஷ் தடுத்தார். அப்போது அவரது வலது கையில் மணிக்கட்டில் வெட்டு விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக போலீஸ்காரர் உயிர் தப்பியுள்ளார்.

    அயனாரம் உதவி கமி‌ஷனர் பாலமுருகன்,இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி லோகேசை பிடித்தனர். அவரது கூட்டாளிகள் 2 பேரும் போலீசில் சிக்கினர். அவர்களது பெயர் அஜித், வேலு என்பது தெரிய வந்தது. 3 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இக்கொலை சம்பவம் காரணமாக அயனாவரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது.

    Next Story
    ×