search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
    X

    கேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

    கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் மேலும் ரூ.5 கோடி ரூபாயும், மக்கள் அளித்த 500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால் பவுடர், 10 ஆயிரம் போர்வைகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். #KeralaRain #KeralaFlood
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நமது அண்டை மாநிலமான கேரளாவில், வரலாறு காணாத கனமழையின் காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுவரை 300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த தொடர் கனமழையின் காரணமாக உயிரிழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு, தமிழ்நாடு மக்களின் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது சம்பந்தமாக, 10.8.2018 அன்று, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அளித்திருந்தேன்.

    மேலும், தமிழ்நாடு மக்களிடமிருந்து இதுவரை பல கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டு, கேரள மாநிலத்திற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஒருங்கிணைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இப்பணி தொடர்ந்து நடைபெறும்.

    தற்போது அங்குள்ள பாதிப்பின் தன்மையை கருத்தில் கொண்டு, முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக 5 கோடி ரூபாய் அளிப்பதுடன், பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக, 500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால்பவுடர் மற்றும் 15 ஆயிரம் லிட்டர் உயர் வெப்ப நிலையில் பதப்படுத்தப்பட்ட பால், வேட்டிகள், கைலிகள், 10 ஆயிரம் போர்வைகள், அத்தியாவசிய மருந்துகளுடன் மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவக் குழுக்கள் ஆகியவை உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

    இப்பணிகளை ஒருங்கிணைக்க தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையரின் தலைமையின் கீழ், இரண்டு மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் சந்தோஷ்பாபு மற்றும் டரேஸ்அகமது ஆகியோர் பணியாற்ற நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #KeralaRain #KeralaFlood #TNCM #EdappadiPalaniswami
    Next Story
    ×