search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியை நெருங்கியது
    X

    வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியை நெருங்கியது

    பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியை நெருங்கி உள்ளது.

    கூடலூர்:

    கேரளாவிலும் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடி வரை எட்டியது.

    ஆனால் அதன்பிறகு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டது. நேற்று வினாடிக்கு 22 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்த நிலையில் இன்று காலை முதல் 15583 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 141.15 அடியாக உள்ளது. அணையில் இருந்து 2600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 7437 மி.கன அடியாக உள்ளது.

    பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் நீர்மட்டம் 67.32 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 4608 கன அடி தண்ணீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக மட்டும் 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5162 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையில் நேற்று முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்று மாலை 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அணை முழு கொள்ளளவை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வைகை அணை கடந்த 2011-ம் ஆண்டு முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. அந்த ஆண்டில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அணையின் நீர்மட்டம் 70 அடியாக இருந்தது. அதன்பிறகு போதிய மழை பெய்யாததால் அணை நிரம்ப வில்லை. அதன்பிறகு தற்போதுதான் அணை முழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வைகை ஆற்றின் இரு கரைகளில் அமைந்துள்ள சிவஞானபுரம், கூட்டாத்து அய்யம்பாளையம், போடிகவுண்டன்பட்டி, எஸ்.வாடிப்பட்டி, நடக்கோட்டை, லட்சுமிபுரம், சித்தர்கள்நத்தம், அணைப்பட்டி, விளாம்பட்டி ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் கரையோரம் வசிப்பவர்கள் ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிக்க வைக்கவோ கூடாது என்றும் அவசர தேவைகளுக்கு 0451-1077 என்ற கட்டுப்பாட்டு எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 43.2, தேக்கடி 40, கூடலூர் 7.1, சண்முகாநதி அணை 4, உத்தமபாளையம் 4, வீரபாண்டி 19, வைகை அணை 1.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×