search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்
    X

    சென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்

    கேரளா, காவிரி கரையோர மாவட்டங்களைத் தொடர்ந்து சென்னையும் அழியும் என்று கூறுவதை நம்ப வேண்டாம் என்றும் அதுபோல் சென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் ஜோதிடர் ஆதித்யகுருஜி தெரிவித்துள்ளார். #KeralaRain
    சென்னை:

    கேரளாவில் பெய்துவரும் கனமழையால் அங்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதேபோல் காவிரியிலும் ஆவேசம் கொண்டு எழுவது போல் சீறிப்பாய்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தைப் பார்த்த மக்கள் ஏதோ பிரளயம் ஏற்படப்போகிறதோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

    மழை வெள்ளத்தைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் சென்னைக்கு ஆபத்து வரும், அழியும் என்றெல்லாம் தகவல் பரப்பப்படுகிறது. மேலும் பஞ்சாங்கத்தை மேற்கோள் காட்டியும் சென்னை அழியப் போகிறது என்று யுடியூப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து மாலைமலர் ஜோதிடர் ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஜோதிடத்தில் விஞ்ஞான ரீதியான கணிப்பும் அவசியம். அந்த வகையில் ஜோதிடமும் விஞ்ஞானமும் கலந்து எதிர்காலம் கணிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் அந்தந்த சீசனுக்கு ஏற்ப வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அதேபோல் தற்போது கேரளா மழை சேதத்தை பயன்படுத்தி தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளப்பார்க்கிறார்கள். அதற்கு பஞ்சாங்கத்தையும் துணைக்கு இழுத்து இருக்கிறார்கள்.

    சமூக வலைதளங்களில் மேற்கோள் காட்டப்படும் பஞ்சாங்கத்தை முழுவதும் படித்தோமேயானால் அதில் இன்று இந்த இடம் அழியும், நாளை இந்த இடம் அழியும் என்று 365 நாளும் ஏதாவது ஒரு அழிவைப் பற்றி குறிப்பிட்டு இருப்பார்கள். ஆனால் அதில் குறிப்பிட்டது போல் எதுவும் நடக்கவில்லை. எதிர்பாராமல் ஏதாவது அழிவு ஏற்பட்டால் அது நாங்கள் முன்கூட்டியே சொன்னது என்று அந்த சமயத்தில் வெளியிடுகிறார்கள். அப்படியானால் அவர்கள் சொன்ன மற்ற 364 கணிப்புகளும் பொய்தானே.

    தற்போது சமூக வலைதளத்தில் சொல்லி இருக்கும் பஞ்சாங்க கணிப்பாளர்கள் ஜோதிட ரீதியாகவோ, விஞ்ஞான ரீதியிலான கணிப்போ அல்ல. ஏதோ அருள்வாக்கு வந்து இன்று இது நடக்கும். நாளை இது நடக்கும் என்று வாய்க்கு வந்ததையெல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார்கள். எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை.


    2015-ம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது ஜனவரியில் சென்னை அழியும் என்று இதே பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டு இருப்பதாக பீதியை கிளப்பினார்கள். அது நடந்ததா? சீசனுக்கு தகுந்தவாறு வதந்தி பரவும் அதை மக்கள் நம்பக் கூடாது.

    அதேபோல் கேரளா, காவிரி கரையோர மாவட்டங்களைத் தொடர்ந்து சென்னையும் அழியும் என்று கூறுவதை நம்ப வேண்டாம். அதுபோல் சென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை. இப்போதும் கூட சென்னைக்கு ஆபத்து என்று தலைப்பிடு பஞ்சாங்கத்தை வைத்து சமூக வலைதளங்களில் செய்தியாக படிக்கிறார்கள். அதை உன்னிப்பாக கவனித்தால் அது சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த பஞ்சாங்கமாக இருக்கும். பழைய பஞ்சாங்கத்தை காப்பி அடித்தும் சொல்கிறார்கள். இது பரபரப்புக்காக மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #KeralaRain #Chennai #AdityaGuruji #Panchangam
    Next Story
    ×