search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரல்வாய்மொழியில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த ஆஸ்பத்திரி ஊழியர் பலி
    X

    ஆரல்வாய்மொழியில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த ஆஸ்பத்திரி ஊழியர் பலி

    ஆரல்வாய்மொழியில் இன்று காலை ஓடும் ரெயிலில் இருந்து குதித்த ஆஸ்பத்திரி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆரல்வாய்மொழி:

    சுசீந்திரத்தை அடுத்த குமாரபுரம், மருங்கூரைச் சேர்ந்தவர் ஜோசப் சாமுவேல். இவரது மகன் இன்பசாதுலின் (வயது 22). இன்பசாதுலின் நர்சிங் படித்துள்ளார். பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இன்று காலை இவர், பெங்களூரு எக்ஸ்பிரசில் ஊருக்கு வந்தார்.

    பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்தில் நிற்காது. ஆனால் ரெயில் நிலையத்தை தாண்டும் வரை ரெயில் மெதுவாகவே செல்லும்.

    இன்று காலையிலும் இந்த ரெயில் ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்தை அடைந்ததும் மெதுவாக சென்றது. அப்போது ரெயிலில் இருந்த இன்பசாதுலின் கீழே இறங்குவதற்காக ஓடும் ரெயிலில் இருந்து குதித்தார். அப்போது நிலை தடுமாறி அவர், ரெயிலின் கீழ் பகுதியில் சிக்கிக் கொண்டார். இதில் தலையில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டார்.

    இன்பசாதுலின் ரெயிலில் அடிபட்டதை கண்டதும் ரெயிலில் இருந்த பயணிகள் அலறினர். அவர்கள் உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர். பின்னர் ரெயிலில் சிக்கி உயிருக்கு போராடிய இன்ப சாதுலினை மீட்டனர். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்சு வந்து சேர தாமதமானது. அதற்குள் இன்பசாதுலின் பரிதாபமாக இறந்து போனார்.

    இன்பசாதுலின் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ஆம்புலன்சு விரைந்து வந்து அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் அவர், உயிர் பிழைத்திருப்பார் என்று பயணிகள் ஆதங்கப்பட்டனர். அவர்கள், ஆம்புலன்சு டிரைவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே இன்பசாதுலின் இறந்த தகவல் அறிந்து அவரது தந்தையும், உறவினர்களும் ஆரல்வாய்மொழி வந்தனர். அவர்கள் இன்பசாதுலின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அங்கு கூடியிருந்தோர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த விபத்து குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்பசாதுலின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணையும் மேற்கொண்டனர்.
    Next Story
    ×