search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே விபத்து- அடுத்தடுத்து 7 ஆம்னிபஸ்கள் மோதல்
    X

    உளுந்தூர்பேட்டை அருகே விபத்து- அடுத்தடுத்து 7 ஆம்னிபஸ்கள் மோதல்

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து 7 ஆம்னி பஸ்கள் மோதிக்கொண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.
    உளுந்தூர்பேட்டை:

    திருச்சியில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.

    அதில் 36 பயணிகள் இருந்தனர். அந்த பஸ் நள்ளிரவு 1 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை பூ.மாம்பாக்கம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது பஸ்சுக்கு முன்னால் சென்ற லாரி திடீரென்று நின்றது. இதனைத்தொடர்ந்து ஆம்னிபஸ் டிரைவர் அதன் மீது மோதாமல் இருக்க திடீரென்று பிரேக் போட்டார். இந்த நிலையில் பின்னால் ஒன்றன் பின் ஒன்றாக வந்த 3 ஆம்னி பஸ்கள் முன்னால் நின்ற பஸ்கள் மீது மோதின.

    இதில் 4 பஸ்களும் சேதமடைந்தது. ஆனால் பஸ்களில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய 4 பஸ்களையும் கிரேன் மூலம் மீட்டனர். பின்பு அந்த பஸ்கள் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. விபத்தில் சிக்கிய பஸ்கள் அகற்றபட்ட பின்பு போக்குவரத்து சீரானது.

    அதேபோல் சென்னையில் இருந்து திருச்சிநோக்கி 3 ஆம்னி பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக நேற்று இரவு புறப்பட்டு வந்தது. அந்த பஸ்கள் இரவு 12 மணி அளவில் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள பரிக்கல் என்ற இடத்தில் வந்தபோது ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டது.

    இதிலும் 3 பஸ்களும் சேதமடைந்தன. ஆனால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருநாவலூர் போலீசார் விரைந்துசென்று விபத்தில் சிக்கிய பஸ்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
    Next Story
    ×