search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழிச்சாலைக்கு எதிராக தீர்மானம் - நிறைவேற்றாத கிராம சபை கூட்டங்களில் அதிகாரிகள் சிறைப்பிடிப்பு
    X

    8 வழிச்சாலைக்கு எதிராக தீர்மானம் - நிறைவேற்றாத கிராம சபை கூட்டங்களில் அதிகாரிகள் சிறைப்பிடிப்பு

    சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவு சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாத கிராம சபை கூட்டங்களில் கோரிக்கையை நிறைவேற்ற கோரி அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக அமைக்கப்படவுள்ளது.

    இந்த திட்டத்துக்காக விவசாய நிலங்களில் குறியீடு கல் பதிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், போலீஸ் பாதுகாப்புடன் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு நில அளவீடு பணிகளை முடித்துவிட்டனர்.

    இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதில், பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்படும் கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற பொதுமக்களும் விவசாய சங்கங்களும் முடிவு செய்திருந்தனர்.

    ஆனால், பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் ஏதும் நிறைவேற்றக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. பிரச்சினை ஏற்படக்கூடிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    செங்கம் அடுத்த நரசிங்கநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிவிட்டு கூட்டத்தை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், கோரிக்கை தொடர்பாக மனுவாக அளித்தால் கலெக்டரிடம் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முழக்கமிட்டனர். நீண்ட நேரமாகியும் பொதுமக்கள் சமாதானம் அடையாததால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    சி.நம்மியந்தல் கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்துக்கு வந்த அதிகாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள், பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று உறுதியாக தெரிவித்தனர். இதனை ஏற்காத அதிகாரிகள் பொதுமக்களிடம் மனுவை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டனர். 3 மணி நேரம் பொதுமக்கள் அதிகாரிகளை சிறை வைத்திருந்தனர்.

    நரசிங்கநல்லூர், தொரப்பாடி, சி.நம்மியந்தல், ஓரந்தவாடி, அந்தனூர், நயம்பாடி, சிறுகலாம் பாடி, மேல்ராவந்தவாடி உள்ளிட்ட கிராமங்களில் பொது மக்களிடம் இருந்து மனுக்களை மட்டும் அதிகாரிகள் வாங்கி சென்றனர்.

    மேல்வணக்கம்பாடி, பெலாத்தூர், தென்னகரம், தென்பள்ளிப்பட்டு, ராந்தம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம சபைக் கூட்டங்களில் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துவிட்டு சென்றுள்ளனர். அதன் நகலையும் வழங்குவதாக கூறியுள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×