search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் கனமழை- ஓணம் பண்டிகை ரத்தானதால் கோவை, திருப்பூரில் வர்த்தகம் பாதிப்பு
    X

    கேரளாவில் கனமழை- ஓணம் பண்டிகை ரத்தானதால் கோவை, திருப்பூரில் வர்த்தகம் பாதிப்பு

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகையை அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #KeralaRain #Onam
    கோவை:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகையை அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.

    இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து ஓணம் பண்டிகைக்கு ஏற்றுமதி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பின்னலாடை ஆகியவை தேக்கம் அடைந்துள்ளது. இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-

    கேரளாவில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். இதற்காக ஆண்டு தோறும் திருப்பூர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பின்னலாடைகள் 10 நாட்களுக்கு முன்பு அங்கு அனுப்பி வைக்கப்படும்.

    இந்த வருட ஓணம் பண்டிகைக்காக கடந்த ஜூன், ஜூலை மாதத்தில் திருப்பூரில் உள்ள 100 முதல் 150 பின்னலாடை உற்பத்தியாளர்கள் ரூ. 10 கோடிக்கு ஆர்டர் பெற்று இருந்தனர். ஆர்டர் பெறப்பட்ட அனைத்து ஆடைகளும் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்ப தயாராக உள்ளது. தற்போது அங்கு கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து பின்னலாடைகளும் தேக்கம் அடைந்துள்ளது. ரெயில் மூலம் அனுப்பினாலும் அங்கு விற்க முடியாத நிலை உள்ளதால் பின்னலாடைகளை அனுப்ப முடியாமல் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.


    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரள மாநிலத்துக்கு கோவை மார்க்கெட்டில் இருந்து தினசரி ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். ஓணம் பண்டிகை காலங்களில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் டன் காய்கறிகள் கொண்டு செல்லப்படும். தற்போது அங்கு கனமழை பெய்து வருவதால் காய்கறிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளது. இதனால் ரூ. 6 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஓணம் பண்டிகை கொண்டாட்டத்துக்காக கேரளாவை சேர்ந்த கோவில் நிர்வாகத்தினர், கல்வி நிறுவனத்தினர் கோவையில் உள்ள பூமார்க்கெட்டுக்கு வந்து பூக்களை வாங்கி செல்வது வழக்கம். தற்போது அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பூக்கள் விற்பனையும் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. #KeralaRain #Onam
    Next Story
    ×