search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரியில் கனமழை- 100 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால் சாலைகள் துண்டிப்பு
    X

    குமரியில் கனமழை- 100 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால் சாலைகள் துண்டிப்பு

    குமரி மாவட்டத்தில் இன்றும் கனமழை நீடித்தது. கரையோரம் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. #kanyakumarirain
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு விடிய, விடிய மாவட்டம் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 23 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. 

    தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நேற்றுமுன்தினம் நிரம்பியது. முதற்கட்டமாக அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.  

    அதேசமயம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது. நேற்று இரவு 12 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இன்று காலை 30 ஆயிரத்து 360 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு 12 ஆயிரத்து 265 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 

    அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் பரளியாறு, குழித்துறையாறு, வள்ளியாறு, பரளியாறு, கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோரம் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பல ஏக்கர் அளவிலான வாழைகள், ரப்பர் தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

    கோதையாறு இடது கரை கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால் பேச்சிப்பாறை, குற்றியாறு சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கீரிப்பாறை பகுதியில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தங்கியுள்ள 150 குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

    கீரிப்பாறை சப்பாத்து பாலத்தை வெள்ளம் இழுத்து சென்றதால் கீரிப்பாறை தனித்தீவாகி உள்ளது. அங்கு ஏராளமான தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கவும், உதவிகள் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 
    மோதிரமலையில் இருந்து குற்றியாறு செல்லும் சாலையின் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் பாய்வதால் குற்றியாறு, கிளவியாறு பகுதிகளில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருவட்டார்- கூற்றவிளாகம் பாலமும் மூழ்கியுள்ளது. மலவிளை - மாத்தூர், அருவிக்கரை- அணைக்கரை  இணைப்பு பாலம் தண்ணீரில் மூழ்கியது. 

    குழித்துறை ஆற்றில் கரைபுரண்ட வெள்ளம் அங்குள்ள சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து செல்கிறது. அங்கிருந்து செல்லும் தண்ணீர் தேங்காய்பட்டினம் பொழிமுகத்தில் கலந்தது. பெருக்கெடுத்து செல்லும் வெள்ளம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை கடலுக்குள் இழுத்துச் சென்றது. 

    பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஈசாந்தி மங்கலம், பறக்கை, சுசீந்திரம், அருமநல்லூர், தெரிசனங்கோப்பு பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஈசாந்தி மங்கலம் பகுதியில் குடியிருப்புகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. வடக்கு தாமரைகுளம் பகுதியில் தென்னந்தோப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. 

    அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு தாலுகாவில் நேற்று பெய்த மழைக்கு 8 வீடுகள் இடிந்து விழுந்தது. தொடர் மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டு கிராமங்கள் இருளில் மூழ்கின. மழை சேதங்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பெருஞ்சாணி அணையையும் அவர் பார்வையிட்டு அணையை 24 மணி நேரமும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 

    இதற்கிடையே குமரி மாவட்டத்தில் இன்றும் கனமழை நீடித்தது. பாலமோர் பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரும் நீர் வரத்து இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 9 அடி உயர்ந்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 33 அடியை எட்டியது. அணைக்கு 8 ஆயிரத்து 124 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 16.92 அடியாக உள்ளது. அணைக்கு 2985 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2614 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. #kanyakumarirain
    Next Story
    ×