search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, மதுரைக்கு மீண்டும் பஸ்கள் இயக்கம்
    X

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, மதுரைக்கு மீண்டும் பஸ்கள் இயக்கம்

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, மதுரைக்கு மீண்டும் நேற்று முதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
    சேலம்:

    சேலம் புதிய பஸ்நிலையத்தில் 2 பிரிவுகளாக கான்கிரீட் தரைதளத்தை புதுப்பிக்க மாநகராட்சி நிர்வாகம் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தது. இதற்காக மண்பரிசோதனை நடைபெற்றபோது மண் ஈரப்பதம் இருந்ததால், மீண்டும் தார்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் முதற்கட்டமாக புதிய பஸ்நிலையத்தின் முதல் பிரிவில் தரைத்தளம் அமைக்கும் பணி தொடங்கியது.

    இதையடுத்து அங்கிருந்து கடலூர், சென்னை, சிதம்பரம், திருவண்ணாமலை உள்பட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் தற்காலிகமாக பழைய பஸ் நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் இருந்து இயக்கப்பட்டன. அதே நேரத்தில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, மதுரை, நெல்லை போன்ற ஊர்களுக்கு 2-வது பிரிவில் இருந்து பஸ்கள் சென்று வந்தன. இந்தநிலையில் புதிய பஸ் நிலையத்தில் முதல் பிரிவில் பணிகள் முடிந்து மீண்டும் கடலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு மீண்டும் பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 2-வது பிரிவில் தரைத்தளம் அமைக்கும் பணி தொடங்கியது. இதனால் அங்கிருந்து இயக்கப்பட்ட மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் தற்காலிகமாக ஜவகர் மில் திடலில் இருந்து புறப்பட்டு சென்றன. இந்த பணிகள் முடிவு பெற்றதால் நேற்று முதல் 2-வது பிரிவில் இருந்து மீண்டும் பஸ்கள் இயக்கப்பப்பட்டன. அதாவது மதுரை, நெல்லை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு வழக்கம் போல பஸ்கள் புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் மீண்டும் அனைத்து பகுதிகளுக்கும் முன்பு இருந்தது போலவே பஸ்கள் புறப்பட்டு செல்வதால், பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் இன்றி பஸ்களை இயக்க வசதியாக ஒவ்வொரு பஸ்களும் புறப்படும் 20 நிமிடத்துக்கு முன்பு பஸ் நிலையத்துக்கு கொண்டு வர வேண்டும். கார், இருசக்கர வாகனங்களை பஸ் நிலையத்துக்குள் கொண்டு வரக் கூடாது என போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர். 
    Next Story
    ×