search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டியில் நாளை சுதந்திர தின விழா: கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடியை ஏற்றுகிறார்
    X

    ஊட்டியில் நாளை சுதந்திர தின விழா: கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடியை ஏற்றுகிறார்

    ஊட்டியில் சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நாளை(புதன்கிழமை) தேசியக்கொடியை ஏற்றுகிறார். நீலகிரி மாவட்டம் முழுவதும் 570 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். #IndependenceDay
    ஊட்டி:

    நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (புதன்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நாளை காலை 10 மணியளவில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். அதனை தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இதில் தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் அணிவகுப்பும் நடக்க உள்ளது.



    விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெறுகிறது. தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இந்த விழாவில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். விழாவையொட்டி மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கொடிக்கம்பம் நடப்பட்டு, மேடை அமைக்கப்பட்டு உள்ளது. விழாவை பொதுமக்கள் பார்ப்பதற்காகவும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தற்காலிகமாக கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    விழாவுக்காக ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த சில நாட்களாக தினமும் காலையில் ஆயுதப்படை போலீசார் துப்பாக்கியுடன் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகையை போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா பார்வையிட்டார். மேலும் ஊட்டி அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். விழா நடைபெறும் மைதானம் மற்றும் அங்குள்ள சாலையை தூய்மையான வைக்கும் பணியில் நகராட்சி சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    விழாவை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா உத்தரவின்பேரில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய 3 தாலுகாக்களில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு(மதுவிலக்கு) கோபி தலைமையிலும், கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தம்பிதுரை தலைமையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் 570 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். சேரம்பாடி, தாளூர், அய்யங்கொல்லி, கக்கனல்லா, எருமாடு, பாட்டவயல், நாடுகாணி, முள்ளி, மஞ்சூர், கெத்தை, குஞ்சப்பணை உள்ளிட்ட 16 சோதனைச்சாவடிகளில் இரவும், பகலும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்துகிறார்கள். சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. குன்னூரில் 4 இடங்கள், ஊட்டியில் 4 இடங்கள், கூடலூரில் 1 இடம், கோத்தகிரியில் 1 இடம் என வாகன சோதனை நடத்தப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் தங்கும் நபர்கள் குறித்த விவரங்களை போலீசார் கேட்டறிந்து சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்ட கலெக்டர் பங்களாவில் இருந்து ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானம் வரை நாளை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. மைதானம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பில் உள்ளது. 
    Next Story
    ×