search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளுத்து வாங்கும் மழை - 136 அடியை எட்டிய பெரியாறு அணை நீர்மட்டம்
    X

    வெளுத்து வாங்கும் மழை - 136 அடியை எட்டிய பெரியாறு அணை நீர்மட்டம்

    நீர்பிடிப்பு பகுதியில் மழை வெளுத்து வாங்கி வருவதால் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை எட்டியது.
    கூடலூர்:

    கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. 155 அடி உயரம் உள்ள இந்த அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால் அணை பலவீணமாக இருப்பதாக கூறி கேரளா தெரிவித்ததால் 136 அடி வரை தேக்க அனுமதிக்கப்பட்டது.

    அதன்பிறகு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்க உத்தரவிடப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு பிறகு அணையின் நீர்மட்டம் 2 முறை 142 அடி வரை தேக்கப்பட்டது.

    இந்த முறையும் நீர்வரத்து அதிகரிப்பால் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில நாட்கள் மழை குறைந்ததால் நீர்வரத்தும் சரிய தொடங்கியது. ஆனால் தற்போது இடுக்கி மாவட்டத்திலும், பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் கன மழை கொட்டி வருவதால் இன்று காலை அணையின் நீர்மட்டம் 136.10 அடியை எட்டியது. இது 4-வது முறையாக நடக்கும் நிகழ்வாகும்.

    அணைக்கு வினாடிக்கு 4419 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 2200 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6143 மி.கன அடியாக உள்ளது.

    உச்ச நீதிமன்றம் கடந்த 7.5.2014-ந் தேதி அளித்த தீர்ப்பில் 142 அடி வரை தேக்க உத்தரவிட்டது. அதன்படி முதன்முறையாக கடந்த 21.11.2014-ந் தேதி அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.

    2-வது முறையாக 7.12.2015-ந் தேதி 142 அடியை எட்டியது. அதன்பிறகு கடந்த 2 வருடமாக போதிய மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் 130 அடியைகூட தாண்டவில்லை. தற்போது 2 வருடத்திற்கு பிறகு மீண்டும் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இந்த வருடம் 3-வது முறையாக 142 அடியை எட்டுமா? என விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

    பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை 61.61 அடியாக உள்ளது. அணைக்கு 2052 கன அடி தண்ணீர் வருகிறது.

    திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காக 900 கன அடியும், மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடியும் என மொத்தம் 960 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 3918 மி.கன அடி உள்ளது.

    பெரியாறு 51.4, தேக்கடி 21.2, கூடலூர் 3.8, உத்தமபாளையம் 3.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
    Next Story
    ×