search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களை தூக்கிலிட வேண்டும் - மகளிர் அமைப்பினர் ஆவேசம்
    X

    குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களை தூக்கிலிட வேண்டும் - மகளிர் அமைப்பினர் ஆவேசம்

    சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும் என்று மகளிர் சங்க தலைவி கூறியுள்ளார்.
    சித்தூர்:

    பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் கொடுமையை கண்டித்து சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், பலாத்காரம், குழந்தைகள் பலாத்காரம், மாணவிகளை சில்மி‌ஷம் செய்தல் ஆகியவற்றை கண்டித்துக் கோ‌ஷம் எழுப்பினர்.

    மாவட்ட மகளிர் சங்க தலைவி ஜெயலட்சுமி பேசியதாவது:-

    ஆந்திர மாநிலத்தில் அதிகளவு பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் பலாத்காரம் நடக்கிறது. அதன் மீது மத்திய மாநில அரசுகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. குழந்தைகளிடம் பலாத்காரம் முயற்சியில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பீளேரைச் சேர்ந்த டாக்டர் ஷில்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முக்கிய காரணம் திருப்பதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர்களின் துன்புறுத்தல் தான். அதேபோல் திருப்பதியைச் சேர்ந்த அதே மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

    இந்தியா முழுவதும் ஒரு நிமிடத்துக்கு 2 பெண்களை பலாத்காரம் செய்யப்படுவதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் ஒரு நிமிடத்தில் 100 பேரை பலாத்காரம் செய்வார்கள். சிறுமிகளை அதிகளவு முதியோர்களே பலாத்காரம் செய்கிறார்கள். அவ்வாறு பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பு அளிக்க வேண்டும்.

    அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிப்பதன் மூலம் நாட்டில் பலாத்கார செயல்கள் குறையும். அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அங்கு, பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் பெண்களுக்கு அதிகளவு துன்புறுத்தல் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் பல பெண்கள் பெற்றோருக்குத் தெரிவிக்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரிவித்தால் மோதல் ஏற்படும் எனக் கருதி பல பெண்கள் வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே அவதிப்பட்டு வருகிறார்கள். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கெனக் காவல் உதவி மையம் அமைக்க வேண்டும்.

    பஸ், ரெயில் நிலையங்களில் போலீசாரை கூடுதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். மாணவிகளை யாராவது கேலி, கிண்டல் செய்தால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் பெண்களுக்கும், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் பாதுகாப்புக் கிடைக்கும். அதை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×