search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாய்க்கால் தூர்வாரததால் குளத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
    X

    வாய்க்கால் தூர்வாரததால் குளத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

    மயிலாடுதுறை அருகே 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வாய்க்காலை உடனடியாக தூர்வாரி கோரி குளத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள விளை நிலங்கள் மற்றும் குளங்களுக்கு காவிரி நீர் செல்லும் நீர்வழிப் பாதையான பல்ல வாய்க்கால் கடந்த 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தற்போது காவிரி பெருக்கெடுத்து ஓடும் நிலையிலும் வில்லியநல்லூர் கிராமமக்கள் தண்ணீரின்றி அவதியுற்று வருகின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் மகாராஜபுரத்திலிருந்து நாகை மாவட்டம் முருகமங்கலம் பழவாற்றில் காவிரி நீரை கொண்டு சேர்க்கும் பிரதான வாய்க்காலாக விளங்குவது மயிலம் வாய்க்கால். மயிலம் வாய்க்காலில் இருந்து பிரியும் பல்ல வாய்க்கால் வில்லியநல்லூர் கிராமத்தின் ஒரே பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

    பல்லவாய்க்கால் கடந்த 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் இந்த ஆண்டும் காவிரி நீர் வில்லியநல்லூர் கிராமத்துக்கு வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஓமகுளத்தில் இறங்கி உடனடியாக வாய்க்காலை தூர்வாரி குளங்களில் நீர் நிரப்ப வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்கள் எழுப்பினர்.

    கர்நாடகாவிலிருந்து திறக்கப்பட்ட காவிரி உபரி நீரானது பல லட்சம் கனஅடி வீணாக கடலில் கலக்கிறது. ஆனால் பல்ல வாய்க்கால் தூர்வாரப்படாததால் பாசனத்துக்கு மட்டுமின்றி குடிநீர் ஆதாரத்துக்கு கூட எங்களுக்கு பயனளிக்கவில்லை. அனைத்து நீர் நிலைகளும் வறண்டு காணப்படுகிறது. பல ஆண்டுகளாக குளங்களிலும் நீர் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் 90 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.

    உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறைந்தபட்சம் குளங்களில் மட்டுமாவது நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×