search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரபாளையத்தில் காவிரியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரை பார்க்க திரண்ட பொதுமக்கள்
    X

    குமாரபாளையத்தில் காவிரியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரை பார்க்க திரண்ட பொதுமக்கள்

    காவிரி ஆற்றோரம் படித் துறைகள் மூழ்கியபடி தண்ணீர் சென்றது. இதனை குமாரபாளையம் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக சென்று கண்டு களித்தனர்.

    நாமக்கல்:

    நடந்தாய் வாழி காவேரி என சங்க கால பாடல்கள் காவிரியை புகழ்ந்து எழுதப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் உருவாகி தமிழகத்தில் பாய்ந்து வளமாக்கி வரும் காவிரி ஆறு குமாரபாளையம், பள்ளி பாளையம் வழியே செல்கிறது.

    கடந்த சில மாதங்களாக வறண்டு காணப்பட்ட காவிரி ஆறு, கர்நாடகத்தில் பெய்த கனமழை காரணமாக கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி ஆற்றோரம் கட்டப்பட்ட படித் துறைகள் மூழ்கியபடி தண்ணீர் சென்றது. குமாரபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக காவிரியின் கண்கொள்ளா காட்சியினை கண்டு களித்தனர். இதனால் குமாரபாளையத்திற்கும், பவானிக்கும் இடையேயான பழைய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், காவிரியில் வெள்ளம் கரைபுரண் டோடும் கண்கொள்ளாக் காட்சியினை கண்டு மிகவும் சந்தோசப்பட்டோம். குறிப்பாக குழந்தைகள் இப்படி காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை கண்டு குதுகளித்து உள்ளனர்.

    காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்தவுடன் ஆற்று படுகையில் உருவான மணல் திட்டுக்களில் திருட்டுத் தனமாக மணல் திருடுவதை தடுக்கவேண்டும்”.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பலர் தங்களை காவிரி ஆற்றுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதையொட்டி குமாரபாளையம் காவிரி ஆறு பிக்னிக் ஸ்பாட் ஆக மாறியது.

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப் பட்டுள்ளதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றுப் பகுதிகளில் நீரின் அளவு உயர்ந்து கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது.

    காவிரி ஆற்றில் அதிக நீர் வந்து கொண்டிருப்பதால் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம், கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கடந்த 5 நாட்களாக அறிவுறுத்தி வருகிறார். மேலும் கரையோரப் பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் தண்டோரா போட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு வருகின்றது.

    குமாரபாளையம் இந்திரா நகர், கலைமகள் வீதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் இப்பகுதியில் வசித்த 45 குடும்பங்களை சேர்ந்த 125 பேர் குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா நகராட்சி திருமண மண்டபத்திற்கு வருவாய்த்துறையின் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் குமாரபாளையம் இந்திராநகர், மணிமேகலை தெருவில் வசித்து வரும் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆண்கள் 15 பெண்கள் மற்றும் குழந்தைகள் சேர்த்து மொத்தம் 33 நபர்கள் பாதுகாப்பாக வெளி யேற்றப்பட்டு புத்தர் வீதியில் செயல்பட்டு வரும் நகராட்சி தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கலெக்டர் ஆசியா மரியம் நிவாரண முகாம் களில் தங்க வைக்கப் பட்டுள்ள பொதுமக்களை நேரில் பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார். இந்திராநகர் கலைமகள் வீதி மற்றும் மணிமேகலை தெரு ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களில் வீடுகளை பார்வையிட்டார். அப்போது அவருடன் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கரன், குமாரபாளையம் வட்டாட்சியர் ரகுநாதன், நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, மற்றும் வருவாய்த் துறை, நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் ஆசியா மரியம் நிருபர்களிடம் கூறுகையில், காவிரி நீர்வரத்து காரணமாக பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் வழங்கப் படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×