search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலத்த மழை எதிரொலி- கேரளாவுக்கு காய்கறி ஏற்றுமதி பாதியாக குறைந்தது
    X

    பலத்த மழை எதிரொலி- கேரளாவுக்கு காய்கறி ஏற்றுமதி பாதியாக குறைந்தது

    கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக கேரளாவிற்கு காய்கறிகள் செல்வது பாதியாகக் குறைந்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தினசரி லாரிகள் மூலம் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கேரளாவிற்கு 90 சதவீத காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து கேரளாவிற்கு தினசரி 50 ல் இருந்து 60 லோடு வரை காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக கேரளாவிற்கு காய்கறிகள் செல்வது பாதியாகக் குறைந்துள்ளது. இது குறித்து மேட்டுப்பாளையம் காய்கறி வர்த்தகசபை தலைவர் வைத்திய லிங்கம்,செயலாளர் குமார் ஆகியோர் கூறியதாவது.

    மேட்டுப்பாளையம் காய்கறிமார்க்கெட்டில் இருந்து 90 சதவீத காய்கறிகள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தினசரி 60 லாரிகளில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படும்.ஆனால் தற்போது கேரளாவில் பெய்யும் மழை காரணமாக தினசரி 25 லாரிகளில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன. மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகளை ஏற்றிச்சென்ற லாரிகள் மழை காரணமாக குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாமல் பாதிவழியில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.

    மேலும் குறிப்பிட்ட இடத்தை சென்றடைந்தாலும் காய்கறிகளை இறக்கிவைக்க முடியாமல் அங்கேயே நிறுத்தப் பட்டுள்ளன. இத்தகைய காரணங்களால் கேரளாவிற்கு செல்லும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. காய்கறிகள் தேக்கம் அடையாமல் இருக்க தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×