search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர் நிலைகளில் ‘செல்பி’ எடுப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்- ஆர்.பி.உதயகுமார் பேட்டி
    X

    நீர் நிலைகளில் ‘செல்பி’ எடுப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்- ஆர்.பி.உதயகுமார் பேட்டி

    நீர்நிலைகளில் ‘செல்பி’ எடுப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

    மதுரை:

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடந்த 9-ந் தேதி முதல் கனமழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி வீதம் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்றும், காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள மாவட்டங்கள் உரிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டுள்ளார். இதன் பேரில் மாவட்ட கலெக்டர்கள் நேரடி கண்காணிப் பில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    அவர்கள் அதிகாரப்பூர்வமான தகவல்களை வழங்குவார்கள். வெள்ளம் சம்பந்தப்பட்ட தகவல்களை தண்டோரா மூலமும், ஊடகங்கள் மூலமாகவும் வருவாய்த்துறை வழங்கும். எனவே அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை நம்ப வேண்டாம்.

    கடந்த 2015-ம் ஆண்டில் நூற்றாண்டு காலம் இல்லாத அளவிற்கு மழை பெய்தது. அந்த மழையையே சமாளித்தோம். எப்பபடிப்பட்ட மழை வந்தாலும் அதை எதிர்நோக்க தயார் நிலையில் தமிழக அரசு இருக்கிறது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

    நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்டங் களில் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே இன்றும், நாளையும் இரு தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வங்காள விரிகுடாவின் வடக்கு பகுதியில் குறிப்பாக வட ஆந்திர கடலோர பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையை மீனவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

    தாழ்வான பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். குழந்தைகள் காவிரி கரையோர பகுதிகளில் குளிப்பது, விளையாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. நீர் நிலைகளில் செல்போன் மூலம் ‘செல்பி’ போட்டோ எடுப்பதையும் மக்கள், இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

    Next Story
    ×