search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாமி சிலை முறைகேடு வழக்கு - திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் கூடுதல் ஆணையர் ஆஜர்
    X

    சாமி சிலை முறைகேடு வழக்கு - திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் கூடுதல் ஆணையர் ஆஜர்

    தங்க சாமி சிலை முறைகேடு வழக்கில் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கோர்ட் உத்தரவுப்படி இன்று காலை திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
    திருச்சி:

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கடந்த 2015-ம் ஆண்டு சோமாஸ் கந்தர் சிலையும், ஏலவார் குழலி சிலையும் புதிதாக செய்யப்பட்டது.

    அந்த சிலை செய்ததில் 8.75 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 2 சிலைகளிலும் சிறிதளவு கூட தங்கம் சேர்க்கப்படாமல் முறைகேடு நடைபெற்றதாக சிலை திருட்டு தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தங்கம் முறைகேட்டில் அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 31-ந்தேதி கைது செய்தனர். பின்னர் கும்பகோணத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.

    சிறையில் அடைக்கப்பட்ட கவிதா கண் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், அதனால் மேல் சிகிச்சை பெற வேண்டி இருப்பதாகவும் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதனால் கடந்த 1-ந்தேதி அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே கவிதா, தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    மனுவை விசாரித்த நீதிபதி, கவிதா ஒரு மாதம் திருச்சியில் தங்கியிருக்க வேண்டும். வாரம் இரு முறை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

    ஜாமீன் கிடைத்ததையடுத்து நேற்று அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி திருச்சி மகளிர் சிறைக்கு சென்றார். அங்கிருந்து அவர் ஜாமீனில் விடுதலையானார். கோர்ட்டு நிபந்தனைப்படி அவர் திருச்சியில் தங்கியிருந்து வருகிறார்.

    இன்று காலை அவர், திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். மேலும் வருகிற 16-ந்தேதி, விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று அவருக்கு போலீசார் உத்தரவிட்டனர். 16-ந்தேதி அவர் ஆஜராகும் போது, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர். விசாரணை முடிவில் இந்த முறைகேடு குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.
    Next Story
    ×