search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடுதல் தண்ணீர் திறப்பால் வேகமாக உயர்ந்து வரும் வைகை அணை
    X

    கூடுதல் தண்ணீர் திறப்பால் வேகமாக உயர்ந்து வரும் வைகை அணை

    பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கு மழைக்காலங்களில் மேகமலை, வெள்ளிமலை, வரு‌ஷநாடு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழையின் மூலமாக நீர் வரத்து ஏற்படும். கடந்த சில வருடங்களாக போதிய மழை பெய்யாததால் வரலாறு காணாத அளவில் குறைந்து வந்தது. 71 அடி உயரமுள்ள அணையின் நீர் மட்டம் 22 அடி வரை சரிந்தது.

    இந்நிலையில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக கேரளாவில் கன மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையில் தேக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர் மட்டம் 135.30 அடியாக உள்ளது. அணைக்கு 2,377 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 2,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    வைகை அணையின் நீர் மட்டம் 61.15 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,063 கன அடி தண்ணீர் வருகிறது. திண்டுக்கல் மற்றும் மதுரை பாசனத்துக்காகவும், மதுரை குடிநீருக்காகவும் 960 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    கடந்த மாதம் 28-ந் தேதி அணையின் நீர் மட்டம் 49.41 அடியாக இருந்தது. அப்போது முதல் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பெரியாறு பிரதான கால்வாய் வழியாக வைகை அணையில் இருந்து 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன்படி அணையில் இருந்து 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த ஆண்டு முழு போக விளைச்சலை எடுக்க முடியும் என வைகை அணை பாசன விவசாயிகள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.
    Next Story
    ×