search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சியில் பலத்த மழை - வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
    X

    பொள்ளாச்சியில் பலத்த மழை - வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்றிரவு கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.
    பொள்ளாச்சி:

    fகேரளாவில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்கிறது.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று மாலை 5 மணி முதல் பலத்த மழை பெய்தது. இன்று காலை 5.30 மணி வரை இந்த மழை நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.

    பொள்ளாச்சி - கோட்டூர் ரோட்டில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இங்குள்ள வீடுகள், ஒர்க்ஷாப்பில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொது மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

    வீடுகளுக்குள் தேங்கிய நீரை பாத்திரங்களில் பிடித்து பொதுமக்கள் வெளியேற்றினார்கள். கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக பரம்பிக்குளம் அணை நிரம்பியது. அந்த அணை முழு கொள்ளளவான 72 அடியை எட்டியது. அணையில் இருந்து வினாடிக்கு 3500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கேரள ஆறுகளில் செல்கிறது.

    மேட்டுப்பாளையம் காரமடை அருகே மலைகள் சூழ்ந்த மேற்குதொடர்ச்சிமலை அடிவாரப்பகுதியில் பில்லூர்அணை அமைந்துள்ளது.

    நீலகிரி மாவட்டம், பில்லூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாகக் கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடியாகும். நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழைஅளவிற்கு ஏற்றாற் போல அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும் குறைந்தும் காணப்படும்.

    தற்போது நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3265 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர் மட்டம் 84.75 அடியாக இருந்தது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர் மட்டம் 88 அடியாக உள்ளது.

    நீர் மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    வால்பாறையில் நேற்று மதியம் முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வால்பாறையில் இன்று காலை தொடர்ந்து சாரல் மழை பெய்தது. சோலையார் அணை நீர்மட்டம் தொடர்ந்து 161 அடியாக உள்ளது.

    கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் மழை நீடிக்கிறது. ஊட்டியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    மழை காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியில் வராமல் அறையில் முடங்கி கிடக்கிறார்கள். இதனால் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
    Next Story
    ×