search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரியில் இருந்து இன்று சென்னைக்கு 74 கனஅடி தண்ணீர் திறப்பு
    X

    வீராணம் ஏரியில் இருந்து இன்று சென்னைக்கு 74 கனஅடி தண்ணீர் திறப்பு

    நீர்வரத்து அதிகமாக இருப்பதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 74 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி உபரிநீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து கல்லணை, கீழணைக்கு வந்த தண்ணீர் வடவாறு வழியாக 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு வந்தது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 800 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று அது 690 கனஅடியாக குறைந்தது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.70 அடியாக இருந்தது. இன்றும் அதே 46.70 கனஅடியாக உள்ளது.

    நீர்வரத்து அதிகமாக இருப்பதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு கடந்த 11-ந் தேதியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று சென்னைக்கு வினாடிக்கு 66 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இன்று அது மேலும் அதிகரித்து 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. நேற்றைய விட இது 8 கனஅடி அதிகமாகும். ஏரியின் நீர்மட்டத்தை பொறுத்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு மாறுபடும்.

    தற்போது வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் விவசாய பாசனத்துக்கு தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இன்று 570 கனஅடி தண்ணீர் அனுப்பபட்டது. அங்கிருந்து வெள்ளைராஜன் வாய்க்கால் வழியாக வினாடிக்கு 470 கனஅடி தண்ணீர் வாலாஜா ஏரிக்கு திறந்து விடப்பட்டது. பின்னர் வாலஜா ஏரியில் இருந்து 420 கனஅடி தண்ணீர் பெருமாள் ஏரிக்கு அனுப்பப்பட்டது.

    கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு வீராணம் ஏரியில் இருந்து பெருமாள் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தற்போது கிளை வாய்க்கால்களை விவசாயிகள் தூர்வாரி வருகின்றனர். இந்த பணிகள் முடிந்த உடன் வரும் 25-ந் தேதிக்குள் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என கூறப்படுகிறது.

    காவிரி தண்ணீர் அதிகமாக வருவதால் கொள்ளிடத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிட ஆற்றங்கரையோரம் உள்ள கஞ்சங்கொல்லை, நடுத்திட்டு, கருப்பூர், அரசூர், வல்லம்படுகை, முட்டம் , கருப்பூர் உள்ளிட்ட 20 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஓலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டனர்.
    Next Story
    ×