search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி, கரூர் காவிரி ஆற்றில் வெள்ளம் - வீடு, வயல்களுக்குள் தண்ணீர் புகுந்தது
    X

    திருச்சி, கரூர் காவிரி ஆற்றில் வெள்ளம் - வீடு, வயல்களுக்குள் தண்ணீர் புகுந்தது

    காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கரூர் மாயனூர் மற்றும் தவுட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வயல்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
    கரூர்:

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட கூடுதல் தண்ணீர் மூலம் கரூர் மாவட்டம் மாயனூரில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக மாயனூர் அணைக்கு மேற்கு பகுதியில் உள்ள மேல மாயனூர், கீழமாயனூர் உள்ளிட்ட பகுதிகளில் நாவல் மரங்கள், கிணறுகள், ஆழ் குழாய் மோட்டார்கள் தண்ணீரில் மூழ்கின.

    இதனால் நாவல் மரங்களில் கட்டியிருந்த வலைகளில் உள்ள நாவல் பழங்களை விவசாயிகள் பரிசல் மூலம் சென்று சேகரித்தனர். மேலும் கட்டளை பகுதியில் உள்ள தரிசு வயல்களிலும், மேல மாயனூர் பகுதியில் உள்ள வாழைத்தோப்பு மற்றும் நெல் சாகுபடிக்கு தயார் செய்யப்பட்ட நிலங்களிலும் தண்ணீர் புகுந்தது.

    திருச்சி கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வரும் நாட்களில் அதிகரிக்கப்படும் என்பதால் கொள்ளிடம் கரையோரத்தில் துணிகளை துவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சலவை தொழிலாளர்கள், பொதுமக்கள் யாரும் ஆற்றங்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    மேலும் சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதை தவிர்த்து, அருகில் உள்ள வாய்க்கால்களுக்கு சென்று குளிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக முசிறி, தொட்டியம் பகுதி காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக கரூர், திருச்சி மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதியில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் நொய்யல் முதல் திருமுக்கூடலூர் வரை காவிரியின் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு வெள்ள நீர் செல்கிறது. இதில் தவுட்டுப்பாளையத்தில் காவிரி கரையோரம் உள்ள வீரமணி என்பவரது வீட்டையும், அங்குள்ள விவசாய நிலங்களிலும் வெள்ளநீர் புகுந்தது. இதனால் வீரமணி தனது குடும்பத்துடன் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்தார்.

    இதையடுத்து மண்மங்கலம் தாசில்தார் கற்பகம், நொய்யல், சேமங்கி, தவுட்டுப்பாளையம், புகளூர் உட்பட காவிரி கரையோர பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அங்கு கரையோரம் வசிக்கும் பொதுமக்களிடம் காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் வருவதால் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும், குழந்தைகளை காவிரி கரையில் விளையாட விடவேண்டாம் என்றும் பாதுகாப்பாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்தார்.
    Next Story
    ×