search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளிர் குழுவுக்கு ரூ.225 கோடி கடன் வழங்க இலக்கு - கலெக்டர் தகவல்
    X

    மகளிர் குழுவுக்கு ரூ.225 கோடி கடன் வழங்க இலக்கு - கலெக்டர் தகவல்

    நடப்பு நிதியாண்டில் மகளிர் சுய உதவி குழுக்கள் தொழில் தொடங்க ரூ.225 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கடல் உவர் ஆராய்ச்சி மையத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த உறுப்பினர்கள் தொழில் தொடங்கிட கடனுதவி வழங்குவது தொடர்பாக வங்கியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த சமுதாய வள அமைப்பாளர்களுடனான ஆலோசனை கருத்தரங்கம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கி பேசியதாவது:- அரசு மகளிர் நலனை பாதுகாத்திடும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஊரகப்பகுதிகளில் உள்ள மகளிர் சுயமாக தொழில் செய்து சமுதாயத்தில் நம்பிக்கையுடன் சுதந்திரமாக செயல்பட ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு நடப்பு நிதியாண்டில் இணைப்பு கடனுதவி திட்டங்களின் வாயிலாக மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.225 கோடி மதிப்பில் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

    மாவட்டத்தில் தற்போது மொத்தம் 6 ஆயிரத்து 892 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. அவற்றில் ஏறத்தாழ 86 ஆயிரம் மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். இத்தகைய மகளிர் சுயஉதவிக்குழுவினர் சிறிய அளவில் மீன்பிடி சார்ந்த தொழில், காய்கறி தோட்டம், தையல்கடை அமைத்தல், பனையோலை சார்ந்த வீட்டு உபயோகப்பொருள் தயாரித்தல் போன்ற பல்வேறு சிறுதொழில் செய்து வருமானம் ஈட்டுகின்றனர். எனவே வங்கியாளர்கள் தகுதியான பயனாளிகளுக்கு, அரசு அறிவித்த திட்டம் 100 சதவீதம் முழுமையாக சென்று சேர்ந்திடும் வகையில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் குருநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சங்கரன், மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் மதியழகன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் குணசேகரன், மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் பிரான்சிஸ், ராமநாதபுரம் பாண்டியன் கிராம வங்கி மேலாளர் குசலவன் உள்பட அரசு அலுவலர்கள், வங்கிகளை சார்ந்த பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழு சமுதாய வளஅமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×