search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கம்பத்தில் கழுத்தை அறுத்து வியாபாரி கொலை
    X

    கம்பத்தில் கழுத்தை அறுத்து வியாபாரி கொலை

    கம்பத்தில் வியாபாரி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கம்பம்:

    தேனி மாவட்டத்தில் கம்பம் 2-வது பெரிய நகரமாக உள்ளது. கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கம்பம் பஸ்நிலையம் அருகே திறந்தவெளி பாராக குடிமகன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இன்று காலை அந்த காலி இடத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர்.

    இந்த வி‌ஷயம் அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கம்பம் தெற்கு போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் கழுத்தை பீர் பாட்டிலால் அறுத்து கொலை செய்துள்ளனர். மேலும் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக பிளாஸ்டிக் கவரால் மூடி தீ வைக்க முயன்றுள்ளனர்.

    ஆனால் சரியாக தீ எரியாததால் முகம் தெளிவாக உள்ளது. கம்பம் பகுதிக்கு அதிக அளவு வியாபாரிகள் வந்து செல்வதால் கொலை செய்யப்பட்ட நபர் வியாபாரியாக இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    கம்பம் பஸ்நிலையம் அருகே அதிக அளவு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. மேலும் டாஸ்மாக் கடையில் இருந்து மது வாங்கி வரும் குடிமகன்கள் அதே பகுதியில் உள்ள கடைகளில் மது அருந்துகின்றனர். மேலும் சிலர் சாலையிலேயே மது குடித்து விட்டு அட்டகாசம் செய்து வருகின்றனர்.

    குடிபோதையில் தங்களுக்குள் சண்டையிட்டு அந்த நபர் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு பகுதிகளில் திட்டமிட்டு கொலை செய்து இங்கு கொண்டு வந்து பிணத்தை வீசி சென்றனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நகரின் பல பகுதிகளில் குற்றச் செயல்களை கண்காணிக்க கேமராக்கள் உள்ளன. ஆனால் போலீசாரின் அலட்சியப் போக்கே குற்றச் செயல்கள் அதிகரிக்க காரணமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். புறக்காவல் நிலையத்தில் போலீசார் இல்லாததால் பஸ் நிலையத்துக்கு வர பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

    பிக்பாக்கெட் திருடர்கள் சமூக விரோதிகள் அதிக அளவில் உலாவி வருவதால் இரவு நேரத்தில் பஸ் நிலையத்துக்குள் வராமலேயே பயணிகள் மெயின் ரோட்டில் இறங்கிச் செல்கின்றனர். எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்தி சமூக விரோத செயல்களை கட்டுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×