search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எரிவாயு குழாயில் வெடிப்பு: பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்- தாசில்தார் வேண்டுகோள்
    X

    எரிவாயு குழாயில் வெடிப்பு: பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்- தாசில்தார் வேண்டுகோள்

    எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என தாசில்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வழுதூர், தெற்கு காட்டூர், ரெகுநாதபுரம் போன்ற பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓ.என்.ஜி.சி) சார்பில் பல்வேறு இடங்களில் இயற்கை எரிவாயு சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு சேகரிக்கப்படும் எரிவாயு, நிலத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் ராமநாதபுரம் அருகேயுள்ள தெற்கு காட்டூரில் செயல்பட்டுவரும் ஓ.என்.ஜி.சியின் எரிவாயு சுத்திகரிப்பு நிறுவனத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்நிலையில் தெற்கு காட்டூரில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு 500 மீட்டர் தூரத்தில் தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் பதிக்கப்பட்டிருந்த பைப் உடைப்பு ஏற்பட்டு, அதன் வழியாக எரிவாயுவும் தண்ணீரும் சேர்ந்து கொப்பளித்துக்கொண்டு வெளியேறி உள்ளது.

    இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் ஒ.என்.ஜி.சி. அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து ஓ.என். ஜி.சி அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு குறித்து ராமநாதபுரம் தாசில்தார் சிவக்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    எரிவாயு குழாயில் வெடிப்பு ஏற்பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாயு கசிவால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    குழாய்கள் பதிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட தால் குழாய் சேதமடைந்து உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வெடிப்பை சரி செய்து விட்டனர். எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

    இனிமேல் வெடிப்பு ஏற்படாதவாறு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×