search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தினமும் 135 மில்லியன் லிட்டர் தண்ணீர் வருகிறது
    X

    வீராணம் ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தினமும் 135 மில்லியன் லிட்டர் தண்ணீர் வருகிறது

    வீராணம் ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தினமும் 135 மில்லியன் லிட்டர் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    சென்னை:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள வீராணம் ஏரி மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும்.

    மேட்டூர் அணை முழுமையாக நிரம்பியதால் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு வந்ததும் கீழணைக்கு திறந்து விடப்பட்டது. இதையடுத்து வடவாறு வழியாக 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 800 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று அது 900 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.80 அடியாக இருந்தது. இன்று அது 46.70 அடியாக உள்ளது. வீராணம் ஏரி நிரம்பி தற்போது கடல்போல் காட்சி அளிக்கிறது.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைப்பதற்காக சேத்தியாதோப்பு அடுத்த பூதங்குடியில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு கடந்த 30-ந்தேதி தண்ணீர் வந்தது. இங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்ப அதிகாரிகள் முன்னிலையில் முன்னேற்பாடு பணிகள் நடந்து முடிந்தன. இந்த நிலையில் வீராணம் ஏரி நிரம்பியதாலும், தண்ணீர் அதிக அளவு உள்ளதாலும் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று காலை சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. இது இன்று காலை 10 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்தடைந்தது. ஒரு நாளைக்கு 135 மில்லியன் லிட்டர் தண்ணீர் செம்பரம்பாக்கத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது.

    வீராணம் குழாய் மூலம் ஒரு நாளைக்கு 185 மில்லியன் லிட்டர் குடிநீர்தான் சென்னைக்கு கொண்டு வர முடியும். அதில் தற்போது 135 மில்லியன் லிட்டர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குழாய்களில் உடைப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் ஆங்காங்கே கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆய்வு கூட்டத்தில் ஏரிகளுக்கு வரும் தண்ணீரை உபயோகப்படுத்தியது போக மீதமுள்ள தண்ணீரையும் சேமித்து குடிநீருக்கு முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கி இருந்தார்.

    அதன்படி ஏற்கனவே வீராணம் குழாய்கள் சுத்தப்படுத்தப்பட்டு சென்னைக்கு குடிநீர் அனுப்ப தயார் நிலையில் வைத்திருந்தனர். இன்று வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்ததும் காலை 10 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வந்து அடைந்துள்ளது.

    வீராணம் ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து வருவதால் சென்னைக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு இனி வரும் நாட்களில் அதிகரிக்கப்படும் என்று பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×