search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு-  அமைச்சர் தகவல்
    X

    3 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு- அமைச்சர் தகவல்

    விருதுநகர் மாவட்டத்தில் 3 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியுள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 3 அரசு உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தி மேல்நிலைப்பள்ளியாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், அரசு நடுநிலைப்பள்ளிகளை உயர் நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தும் பணிகளை அம்மா வழியில் செயல்பட்டு வரும் அ.தி.மு.க. அரசு செவ்வனே செய்து வருகிறது.

    அதன் அடிப்படையில் சிவகாசி தொகுதிக்குட்பட்ட பள்ளபட்டி கிராமத்தில் இயங்கி வரும் உயர்நிலைப்பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி கிராம மக்கள் என்னிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    பட்டாசு தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் வசிக்கும் பகுதி பள்ளபட்டி என்பது எனக்கு நன்கு தெரியும். எனவே இதை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் எடுத்துரைத்தேன்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள கூமாப்பட்டியில் இயங்கி வரும் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா என்னிடம் கோரிக்கை விடுத்தார்.

    விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் கூமாப்பட்டியில் மேல் நிலைப்பள்ளி மிகவும் அத்தியாவசியம் என்பதையும் நான் நன்கு அறிவேன்.

    அதுபோலவே சாத்தூர் தொகுதி ஓ.மேட்டுப்பட்டியில் செயல்பட்டு வரும் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி மக்கள் ஒன்றியச்செயலாளர் சண்முகக்கனி தலைமையில் என்னிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    இந்த பள்ளிகளையும் உடனடியாக மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தக் கோரி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.

    அதன் பேரில் தற்போது இந்த 3 பள்ளிகளையும் தரம் உயர்த்தி பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப்யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    விருதுநகர் மாவட்ட மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாணவர்களின் நலன் கருதி இந்த உத்தரவை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறையின் செயலர் பிரதீப்யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமிநாதன் உள்ளிட்ட அனைத்து பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×