search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்தில் சிக்கிய குடிசை பகுதிகளை அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றிய கருணாநிதி
    X

    தீ விபத்தில் சிக்கிய குடிசை பகுதிகளை அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றிய கருணாநிதி

    அடிக்கடி தீ விபத்தில் சிக்கிய குடிசைகளை அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றியதற்கு கருணாநிதி தான் காரணம். அவர் கொண்டு வந்த பல திட்டங்களில் சில உன்னத திட்டமாக கருதப்படுகிறது. #DMKLeader #Karunanidhi
    சென்னை:

    சென்னை நகரில் ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் ஓலைக் குடிசைகளாக இருந்தன. இன்று அவையெல்லாம் அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாறியிருக்கின்றன.

    இதற்கு கருணாநிதி தான் காரணம். அவர் கொண்டு வந்த பல திட்டங்களில் சில உன்னத திட்டமாக கருதப்படுகிறது. இந்த அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மத்தியில் கருணாநிதியின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நந்தனம், டேங்க் பண்ட் ரோட்டில் உள்ள குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிக்கும் செங்குட்டுவன் இது பற்றி கூறும் போது, நான் 5 வயதாக இருந்த போது ஓலைக் குடிசையில் இருந்தோம். இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு அனைத்து குடிசைகளும் நாசமாகி விடும். எனது 12 வயது வரை இந்த நிலை தான் நீடித்து வந்தது. அப்போது தான் நாங்கள் இருந்த வீட்டை கான்கிரீட் கட்டிடமாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிக் கொடுத்தது. அதன் பிறகு தான் நிம்மதியாக இருக்கிறோம் என்றார்.

    1970-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது தான் குடிசைகளை கான்கிரீட் கட்டடிமாக மாற்றும் வகையில் குடிசை மாற்று வாரியத்தை கொண்டு வந்தார்.

    இது பற்றி சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் கூறும் போது, முந்தைய காலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் எல்லா வருவாய் தரப்பினருக்கும் வீடுகளை உருவாக்கியது. கருணாநிதி தான் குடிசை வாழ் மக்களுக்கு முன்னுரிமை அளித்து வீடு கட்ட வேண்டும் என்பதற்காக குடிசை மாற்று வாரியத்தை தனியாக உருவாக்கினார். அதே நேரத்தில் மக்களுக்கு தாங்கள் குடியிருந்த இடங்களிலேயே வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அவை போதுமான அளவுக்கு நிலம் இல்லை என்பதால் அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டும் திட்டத்தை உருவாக்கினார். இதனால் மக்கள் அந்தந்த பகுதிகளிலேயே குடியிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது என்று கூறினார்.

    நொச்சிக்குப்பத்தில் அன்றை காலக்கட்டத்தில் 1200 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இது பற்றி அந்த பகுதியை சேர்ந்த ரேஷ்மா (வயது 40) கூறும் போது, எத்தனையோ கட்சிகள் வந்தன. ஆனாலும் கருணாநிதிக்கு தான் இப்படியொரு திட்டம் தோன்றியது. அவர் எங்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தார். அவருடைய மறைவு எங்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இனி தமிழ்நாடு என்ன ஆகுமோ என்று கவலையாக இருக்கிறது என்றார்.

    சூரியா நகரைச் சேர்ந்த தமிழரசி கூறும் போது, 40 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் குடிசைகளையெல்லாம் மாற்றி கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுத்தார். நாங்கள் புதிய வீட்டிற்கு வந்த போது, மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். கடந்த காலங்களில் மின்சாரம் கூட இல்லாமல் தவித்தோம். இப்போது பூங்கா, உடற்பயிற்சி கூடம், பள்ளி கூடம், குடிநீர் என அனைத்து வசதிகளுடன் வாழ்கிறோம் என்று கூறினார்.

    சமூக ஆர்வலர் கீதா கூறும் போது, சென்னையில் தொழிலாளர் வர்க்கம் குடிசை பகுதிகளில் தான் வாழ்வதை அடையாளம் கண்ட கருணாநிதி அவர்களுக்காக குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி வீடுகளை கட்டிக்கொடுத்தார். அவர்களின் குடிசை வீடுகள் மழையாலும், தீயாலும் அடிக்கடி பாதித்து வந்த நிலையில் அதில் மாற்றத்தை உருவாக்கும் வகையில் இந்த வீடுகள் அமைந்தன என்று கூறினார்.

    குடிசை மாற்று வாரியம் மூலம் சென்னையில் மட்டும் சுமார் 69 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #DMKLeader #Karunanidhi
    Next Story
    ×