search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி எண்ணத்தில் உருவான சென்னையின் முக்கிய நகரங்கள்
    X

    கருணாநிதி எண்ணத்தில் உருவான சென்னையின் முக்கிய நகரங்கள்

    இன்று சென்னையின் முக்கிய அடையாளங்களாக அண்ணா நகர், அசோக் நகர், கே.கே. நகர் போன்ற இடங்கள் உள்ளன. இந்த நகரங்களை எல்லாம் கருணாநிதி தான் உருவாக்கினார். #DMKLeader #Karunanidhi
    சென்னை:

    1968-ல் அறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக இருந்த போது கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அவர் சென்னையின் பிரதான நகரை ஒட்டி உள்ள மற்ற பகுதிகளையும் புதிய நகராக உருவாக்க வேண்டும் என்று திட்டத்தை கொண்டு வந்தார்.

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் அப்போது அண்ணா நகர் உருவாக்கப்பட்டது. இந்த பகுதி அந்த நேரத்தில் செங்கல் சூளை நிறைந்த இடமாகவும், புதர்கள் நிறைந்த பகுதியாகவும் இருந்தது.

    இன்று சென்னையின் பிரமாண்ட நகரமாகவும், முதன்மையான நகரமாகவும் அண்ணா நகர் மாறி இருக்கிறது. இதை அண்ணா நகரில் வசிக்கும் மக்களில் பலரும் கருணாநிதியின் சாதனை என்றும் நினைவு கூருகின்றனர்.

    அண்ணா நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் கூறும்போது, இந்த பகுதி முழுவதும் செம்மண் நிறைந்த பகுதியாக இருந்தது. மேலும் சதுப்பு பகுதியாகவும் காணப்பட்டது. கருணாநிதி காலத்தில் தான் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் இந்த நகரம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது.

    இன்று எல்லா வருவாய் தரப்பினரும் வசிக்கும் பகுதியாக அண்ணாநகர் இருக்கிறது என்று கூறினார்.

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய முன்னாள் அதிகாரி ஒருவர் கூறும்போது, அண்ணாநகர் மட்டும் அல்ல சென்னையின் பல பிரதான நகரங்களை கருணாநிதி உருவாக்கினார். கே.கே. நகர், அசோக்நகர், கொளத்தூர், எம்.கே.பி. நகர், மணலி, சோழிங்கநல்லூர் மற்றும் பல இடங்களில் அவரால் நகரங்கள் உருவாக்கப்பட்டன.


    கருணாநிதியின் ஆட்சி காலத்தில் நகரங்களை உருவாக்கிய அளவிற்கு அவருக்கு பின்னால் வந்தவர்கள் உருவாக்கவில்லை என்று கூறினார்.

    கோவை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் திராவிடமணி கூறும்போது, 1970-ம் ஆண்டு வாக்கில் மாநிலத்தில் பல இடங்களில் குடிசை வீடுகள் தான் இருந்தன. அவை தீ பிடிப்பது, மழையால் கடுமையாக சேதம் அடைவது போன்றவற்றை சந்தித்தன.

    இதற்கு மாற்றாகத்தான் வளர்ச்சி அடைந்த நகரங்களை கருணாநிதி உருவாக்கினார் என்று கூறினார்.

    1972-ல் வீடுகள் கட்ட உதவும் வகையில் நிலக்கரி சாம்பல் மற்றும் பல்வேறு மூலப்பொருட்களை கொண்டு உருவாக்கும் செல்லுலர் கான்கிரீட் தொழிற்சாலையை கருணாநிதி எண்ணூரில் உருவாக்கினார். பின்னர் 1992-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அது மூடப்பட்டு விட்டது.

    சென்னையை சேர்ந்த தி.மு.க. தொண்டர் முருகன் கூறும்போது, கருணாநிதியின் திட்டங்களால் தான் சென்னை நகரம் விரிவடைந்தது. பல்வேறு துணை நகரங்களையும் அவர் கொண்டு வந்தார். அவர் சென்னையில் உருவாக்கிய அண்ணா நகர் போல எல்லா நகரங்களிலும் குறைந்த வருவாயினரும் வீடு கட்டி குடியிருக்கும் வகையில் நகரங்களை உருவாக்கினார் என்றார்.

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய முன்னாள் அதிகாரி ஒருவர் கூறும்போது, தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் மாநிலம் முழுவதும் ஏராளமான புதிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால் 2001-2006-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வீட்டு வசதி திட்டங்களை நிறுத்திவிட்டார்கள் என்று கூறினார். #DMKLeader #Karunanidhi
    Next Story
    ×