search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா பல்கலை. முறைகேடுகளுக்கு பதிவாளர் தான் காரணம் - ஆசிரியர் கூட்டமைப்பு குற்றச்சாட்டு
    X

    அண்ணா பல்கலை. முறைகேடுகளுக்கு பதிவாளர் தான் காரணம் - ஆசிரியர் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

    அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் மறுமதிப்பீடு மதிப்பெண் வழங்குவதில் நடைபெற்ற முறைகேடுகள் அனைத்திற்கும் பதிவாளர் கணேசன் தான் காரணம் என பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது. #AnnaUniversity #RevaluationScam
    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளில் மறுமதிப்பீடு மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அதிகாரி ஜி.வி.உமா மற்றும் 10 பேராசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களது வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். #AnnaUniversity #RevaluationScam

    பெயிலான மாணவர்களுக்கு பலமடங்கு மதிப்பெண்கள் போடப்பட்டு அவர்களை பாஸ் ஆக்கியதாகவும், இதற்காக ஆயிரக்கணக்கில் பணம் கைமாறியதாகவும், லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 70 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களிடம் இதுபோல் கோடிக்கணக்கில் பணம் பெறப்பட்டு மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும், தற்போதைய பேராசிரியையுமான ஜி.வி.உமா முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக முறைகேடுகள் அனைத்திற்கும் பதிவாளர் கணேசன் தான் காரணம் என பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கூட்டமைப்பு இன்று பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.

    அண்ணா பல்கலைக்கழக வேந்தரான ஆளுனர் பன்வாரிலால் புரோகித் மற்றும் துணை வேந்தர் சூரப்பாவுக்கு ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அதில், அண்ணா பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு மதிப்பெண் வழங்குவதில் நடைபெற்ற அனைத்து முறைகேடுகளுக்கும் பதிவாளர் கணேசன் தான் முக்கிய காரணம், எனவே, அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

    மறுமதிப்பீடு மதிப்பெண் முறைகேடு விவகார்த்தில் பேராசிரியை உமா சிக்கியுள்ள நிலையில், இதற்கு முக்கிய காரணம் பதிவாளர் கணேசன் தான் என ஆசிரியர் கூட்டமைப்பு வேந்தருக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×