search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி விரைவில் நலம் பெற்று கோபாலபுரம் இல்லம் செல்வார் - நம்பிக்கையுடன் தொண்டர்கள் காத்திருப்பு
    X

    கருணாநிதி விரைவில் நலம் பெற்று கோபாலபுரம் இல்லம் செல்வார் - நம்பிக்கையுடன் தொண்டர்கள் காத்திருப்பு

    கருணாநிதி விரைவில் நலம் பெற்று கோபாலபுரம் இல்லத்திற்கு திரும்புவார் என காவேரி மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ள திமுக தொண்டர்கள் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். #Karunanidhihealth #Karunanidhi #DMK #KauveryHospital
    சென்னை :

    திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக  இன்றுடன் 11 நாட்களாக  ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் அவரது உடல்நிலை படிப்படியாக நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது என காவேரி மருத்துவமனை வெளியிட்ட ஆரம்பகட்ட அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, கல்லீரல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டனில் இருந்து புகழ் பெற்ற டாக்டர் முகமது ரேலா காவேரி மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டார். அவர், காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள் குழுவினருடன் இணைந்து கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்.

    கருணாநிதியின் உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வரும் மருத்துவக்குழுவினர், அவருக்கு தினந்தோறும் பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் 24 மணி நேரமும் அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால், காவேரி மருத்துவமனை நேற்று வெளியிட்ட 6-வது அறிக்கையில், கருணாநிதியின் வயோதிகம் காரணமாக அவரின் முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருவதாக தெரிவித்தது.

    இதனால், பதற்றமடைந்த திமுக தொண்டர்கள் கருணநிதியின் உடல்நிலை குறித்து தெரிந்துகொள்வதற்காக மருத்துவமனைக்கு வர தொடங்கியதால் அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.



    கருணாநிதியின் துணைவி ராசாத்தி அம்மாள் மற்றும் அவரது மகள் கனிமொழி நேற்றிரவு முழுவதும் காவேரி மருத்துவமனையில் தங்கியிருந்து கருணாநிதியின் உடல்நலத்தை கவனித்து வருகின்றனர்.

    கருணாநிதி நலம்பெற்று நிச்சயம் நல்ல உடல்நலத்துடன் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு தாங்கள் இருப்பதாக ஊடகங்களிடம் கூறிய திமுக தொண்டர்கள் நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிறவு தாண்டி விடிய விடிய மருத்துவமனையின் முன்பு கால்கடுக்க காத்திருக்கின்றனர். ‘எழுந்து வா தலைவா’ என அவர்கள் உணர்ச்சி பெருக்குடன் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

    மேலும், பிறவியிலேயே போராளியான கருணாநிதி, தன் வாழ்க்கை முழுக்க சந்தித்த பல போராட்டங்களையும் ஏணிப்படிகளாய் மாற்றி உச்சம் தொட்டவர். அவர், விரைவில் தொண்டர்களை பார்த்து கையசைப்பார், அவர் பூரண நலம் பெற்று விரைவில் கோபாலபுரம் இல்லம் செல்வார் என மருத்துவமனை முன்பு குவிந்துள்ள திமுக தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதனால், அப்பகுதி முழுக்க பரபரப்பாக காணப்படுகிறது.

    மேலும், அதிகப்படியான தொண்டர்கள் குவிந்துள்ளதால், அவர்கள் கட்டுப்பாட்டை இழந்திடாமல் இருக்கும் வகையில் காவேரி மருத்துவமனை முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #Karunanidhihealth #Karunanidhi #DMK #KauveryHospital
    Next Story
    ×