search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை கேரளாவில் ஸ்டிரைக் - ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி விற்பனை மந்தம்
    X

    நாளை கேரளாவில் ஸ்டிரைக் - ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி விற்பனை மந்தம்

    கேரளாவில் நாளை ஸ்டிரைக் நடைபெற உள்ளதால் ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி விற்பனை மந்தமடைந்துள்ளது.
    ஒட்டன்சத்திரம்:

    தென் தமிழகத்தில் மிகப் பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை இங்கு கொண்டு வருகிறார்கள். இங்கிருந்து கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் கேரள மாநிலத்துக்கும் அதிக அளவில் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக 60 சதவீத காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.

    மோட்டார் வாகன சட்ட திருத்தத்தால் அபராத தொகை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே நாடு முழுவதும் நாளை ஸ்டிரைக் நடத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

    கேரளாவில் லாரிகள் ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறிகளை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரவில்லை. பொதுவாக காலையில் ஆர்டர் எடுக்கப்பட்டு லாரிகள் மூலம் இரவு நேரங்களில் அனுப்பி வைக்கப்படும்.

    நாளை வேலை நிறுத்தம் என்பதால் இன்றே ஆர்டர்கள் குறைந்துள்ளது. இதனால் குறைந்த அளவு விவசாயிகளே வந்திருந்தனர்.

    வியாபாரிகள் கேரளாவில் இருந்து வராததால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை மந்தமடைந்துள்ளது. சுமார் 60 சதவீத காய்கறிகள் விற்பனை சரிந்துள்ளது. இந்த மாதத்தில் லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு நாள், ஆடிப்பெருக்கு மற்றும் சனிக்கிழமை என அடுத்தடுத்து மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் காய்கறிகளின் விலையும் சரிந்தே காணப்படுவதால் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×