search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் 500 அரங்குகளுடன் நிட்ஷோ கண்காட்சி - அமைச்சர் தொடங்கி வைத்தார்
    X

    திருப்பூரில் 500 அரங்குகளுடன் நிட்ஷோ கண்காட்சி - அமைச்சர் தொடங்கி வைத்தார்

    திருப்பூரில் நிட்-ஷோ எந்திர கண்காட்சியை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள வேலன் ஓட்டல் மைதானத்தில் நிட்-ஷோ எந்திர கண்காட்சி-2018 தொடக்க விழா நடந்தது. கண்காட்சியை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

    இந்த கண்காட்சி திருப்பூர் தொழில் துறையினரின் வர்த்தகத்தை உயர்த்தும் வகையிலும், அவர்கள் பல்வேறு தகவல்கள் மற்றும் வர்த்தகர்களின் அறிமுகங்களை பெறும் வகையிலும் நடத்தப்படுகிறது. கண்காட்சி நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது.

    இதில் எம்.எல்.ஏக்கள் குணசேகரன், விஜயகுமார், கரைப்புதூர் நடராஜன் மற்றும் ஏ.இ.பி.சி. துணை த்தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியில் கூறியதாவது:-

    நிட்-ஷோ கண்காட்சி மூலம் தொழில்துறையினருக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும். இதில் கலந்துகொள்வதன் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ள முடியும். அனைத்து அரங்குகளிலும் தொழில்துறையினருக்கு தேவையான பிரிண்டிங், நிட்டிங் உள்ளிட்ட எந்திரங்கள் இடம்பெற்றுள்ளன.

    ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்- அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திலும் இது வலியுறுத்தப்பட்டு வருகிறது. தொழில்துறையினருக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது. கோவை கொடிசியா மைதானத்தை போல் திருப்பூரில் தொழில்துறையினர் பயன்பெறும் வகையில் நிரந்தர கண்காட்சி வளாகம் விரைவில் அமைக்கப்படும். இதற்கான இடமும் விரைவில் தேர்வு செய்யப்படும்.

    இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சலுகைகளுடன் கூடிய ஜவுளிக்கொள்கை விரைவில் அறிவிக்க முதல்- அமைச்சரிடம் வலியுறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×